ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு விற்பனை சரிவு

ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு விற்பனை சரிவு

2 mins read
0aa5e624-5fba-43ea-8f2d-c46dca616d0f
வழக்கமாகச் சீனர்களின் ஆத்ம சாந்தி வழிபாட்டு மாதத்தில் வீடுகளின் விற்பனை மந்தமாகக் காணப்படும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நகர மறுசீரமைப்பு ஆணையம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 15) வெளியிட்ட தரவுகளின்படி ஆகஸ்ட் மாதத்தில், புதிய வீட்டு விற்பனை 153 ஆகக் குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு இதே மாதத்தில் 2,142 வீடுகள் விற்கப்பட்ட நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் இது 92.9 விழுக்காடு சரிவாகும்.

வழக்கமாக, சீனர்களின் ஆத்ம சாந்தி வழிபாட்டு மாதத்தில் வீடுகளின் விற்பனை மந்தமாகக் காணப்படும்.

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை, ஜூலை மாதம் விற்கப்பட்ட 731 வீடுகளுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட 79 விழுக்காடு குறைவாகும்.

மேலும் வீடு வாங்குபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் புதிய திட்டங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படாததே இந்த விற்பனைச் சரிவுக்குக் காரணம் என்று ஹட்டன்ஸ் ஏஷியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் யிப் தெரிவித்தார்.

இந்த ஆண்டு, சீனர்களின் ஆத்ம சாந்தி வழிபாடு ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 10 வரை இடம்பெற்றது. இந்தக் காலகட்டத்தில் மேம்பாட்டாளர்களும் வீடு வாங்குபவர்களும் சொத்துச் சந்தையில் ஆர்வம் காட்டமாட்டார்கள்.

2025ஆம் ஆண்டில் அந்த வழிபாடு ஆகஸ்ட் 23 முதல் செப்டம்பர் 21 வரை இருந்தது.

அதுபோல், இந்த ஆண்டில் வீடுகளை வாங்க விரும்பியவர்களுக்கும் புதிய தெரிவுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், புதிய திட்டங்கள் சந்தைக்கு வருவதால், அடுத்த மாதத்தில் விற்பனை அதிகரிக்கும் என்று புராப்நெக்ஸ் (PropNex) நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் உள்ளடக்கப் பிரிவுத் தலைவர் வோங் சியூ யிங் எதிர்பார்க்கிறார்.

ஹாலந்து பிளைன் பகுதியில் அமைக்கப்படும் முதல் திட்டமான ஆம்பர்வுட் அட் ஹாலந்து, லேக்சைடில் அமையவிருக்கும் லுசெர்ன் கிராண்ட் ஆகிய திட்டங்கள் விரைவில் சந்தைக்கு வரவிருப்பதாக வோங் குறிப்பிட்டார்.

நொவினாவில் அமையும் ‘தி செர்ரா ரெசிடென்சஸ்’ திட்டம் அறிமுகம் காணவிருப்பதும் சந்தையில் அதிக வீடுகளை விற்பனைக்குத் தரும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்
வீடுவீட்டு விற்பனைசொத்துச் சந்தை