கிழக்கு-மேற்கு ரயில் பாதையில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2) இரவு சிறிய தடங்கல் ஏற்பட்டது.
பூகிஸ் மற்றும் பிடோக் ரயில் நிலையங்களுக்கு இடையில் பயணம் செய்த பயணிகள் சிலர் குறைந்தது 20 நிமிடங்கள் தாமதமாகப் பயணம் செய்ய நேர்ந்தது.
இரவு 8 மணிவாக்கில் பல்வேறு ரயில் நிலையங்களில் உள்ள பதாகைகள், மின்னிலக்க விளம்பரப் பலகைகள் உள்ளிட்டவற்றில் ரயில் தாமதம் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன. “தண்டவாளத்தில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதால் பயணிகளின் பயண நேரம் கூடும்,” என்று அதில் அறிவிக்கப்பட்டது.
பூகிஸ் மற்றும் பிடோக் ரயில் நிலையங்களுக்கு இடையில் ஆறு ரயில் நிலையங்கள் உள்ளன.
பாதிக்கப்பட்ட நிலையங்களில் ஒன்றான பாய லேபாரில் பயணிகளுக்குப் பெரிய குழப்பம் ஏற்பட்டது. ரயில்கள் எந்தத் திசையில் செல்கின்றன எனப் புரியாமல் பயணிகளும் ஊழியர்களும் சிறிது நேரம் தடுமாறினார்.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் சமூக ஊடகங்களில் சரியாகத் தகவல் பகிராதது சில பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், பயணத் தாமதம் குறித்து எஸ்எம்ஆர்டி நிறுவனத்திடம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி கேட்டது.
அதற்குப் பதிலளித்த அந்நிறுவனத்தின் தலைவர் லம் ஷியா கை, “அல்ஜுனிட் ரயில் நிலையம் அருகே இரவு 7.50 மணிவாக்கில் தண்டவாளத்தில் பிரச்சினை ஏற்பட்டது. ரயில்கள் தடம் மாறுவதில் சிக்கலை எதிர்நோக்கின,” என்றார் அவர்.
தொடர்புடைய செய்திகள்
கிழக்கு-மேற்கு பாதையில் உள்ள மற்ற ரயில் நிலையங்கள் வழக்கம்போல் செயல்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
லாவண்டர், காலாங், அல்ஜுனிட், பாய லேபார் ரயில் நிலையங்களுக்கு இடையில் தற்காலிக ரயில் சேவை வழங்கப்பட்டது. அதனால் பயணிகளின் பயண நேரம் 20 நிமிடங்கள் கூடியது.
இரவு 9.15 மணிவாக்கில் தண்டவாளப் பிரச்சினை சரிசெய்யப்பட்டது. கிழக்கு-மேற்கு பாதையின் பயணம் வழக்கநிலைக்குத் திரும்பியது.

