நினைவாற்றல் இழப்பு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கண்காட்சிகள், மூத்தோருக்கு இலவச உடல் பரிசோதனைகளை உள்ளடக்கிய ‘ஐ-ரிமெம்பர்’ திட்டத்தின் நிகழ்ச்சி குவீன்ஸ்டவுன் சமூக நிலையத்தில் நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் யோங் லூ லின் மருத்துவப்பள்ளி சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் இத்திட்டத்தில் ஏறத்தாழ 400 மூத்தோர் பங்கேற்று இலவச மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். 50 வயதுக்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களுக்கு இப்பரிசோதனைகள் வழங்கப்பட்டன.
அறுபது வயதுக்கு மேற்பட்ட மூத்தோர் பத்துப் பேரில் ஒருவருக்கு நினைவாற்றல் இழப்பு நோய் உள்ள நிலையில், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு, பராமரிப்பாளர்களுக்கான ஆதரவு ஆகியவற்றை வழங்கும் நோக்கில் பல்வேறு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய இத்திட்டம் கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வருகிறது.
சனிக்கிழமை நடைபெற்ற இவ்வாண்டின் ‘ஐ-ரிமம்பர்’ உடற்பரிசோதனை நிகழ்ச்சியில் சட்ட அமைச்சு மற்றும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மூத்தோர், பராமரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த ஆண்டு முதல் இத்திட்டத்தில் இளையர்கள் தொண்டூழியர்களாக இணைக்கப்பட்ட நிலையில், இவ்வாண்டு தொடக்கக் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களும் பங்காற்றியுள்ளனர்.
தொடக்கக்கல்லூரிகள், பலதுறைத் தொழிற்கல்லூரிகள் ஆகியவற்றிலிருந்து 28 பேர், மருத்துவ மாணவத் தொண்டூழியர்கள் 34 பேர், திட்டக்குழு உறுப்பினர்களான 23 மருத்துவ மாணவர்கள் என 85 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்காற்றினர்.
இதில், உடல் பரிசோதனையுடன் அறிவாற்றல் பரிசோதனை, தனிமை, மன அழுத்தம் ஆகியவற்றைத் தெரிந்துகொள்ளும் பரிசோதனைகளும் இடம்பெற்றன.
கண்காட்சியில் நினைவாற்றல் இழப்பு நோய்த் தடுப்பு, மன அழுத்தம், பராமரிப்பாளர்களுக்கு ஏற்படும் சோர்வு, சமூகப் பங்கேற்பு எனப் பல விவகாரங்கள் குறித்து விளக்கம் தரும் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. மூளையைத் துடிப்புடன் வைத்திருப்பது, நல்ல உறக்கம், உடற்பயிற்சி, ஆரோக்கிய உணவு ஆகியவை பற்றிய ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
திட்டத்தில் இளையர் பங்களிப்பு தொடங்கியுள்ள நிலையில் மூத்தோருக்கு நினைவாற்றல் இழப்பு நோய் குறித்த தெளிவு, தொடர்புத்திறன் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. மருத்துவ மாணவர்களுக்குப் பரிசோதனை தொடர்பான கூடுதல் பயிற்சிகளும் வழங்கப்பட்டதாகக் குழுவினர் தெரிவித்தனர்.
“மூப்படையும் சமூகத்தில் முதியோர்க்கு ஆதரவை அளித்துச் சேவையாற்றவுள்ள என்னைப் போன்ற வருங்கால மருத்துவர்கள் இணைந்தது சிறப்பு”, என்று இத்திட்டத்தில் தொண்டூழியராகப் பங்களித்த மாணவர் ஜகன் சந்திரமோகன், 20, தெரிவித்தார்.
மூத்தோரின் தனிமை, சமூக இணைப்பு, மனநலன் ஆகியவற்றைக் கவனித்து, அவர்களுக்கு உகந்த மருத்துவ அல்லது சமூக ஆதரவு அமைப்புகளுக்கு வழிகாட்டும் ‘ஃபாலோ-அப்’ குழுவில் இவர் செயலாற்றுகிறார்.
அவர்களது அன்றாட வாழ்வு குறித்து பகிர்ந்துகொள்ளும்போது, அதில் கிடைக்கும் அனுபவம் எதிர்காலத்தில் தம்மிடம் வரும் நோயாளிகளுக்குச் சிறப்பாக, மேம்பட்ட முறையில் மருத்துவம் பார்க்க உதவும் என்றும் தெரிவித்தார் மோகன்.
அந்த முதியவர்கள் தங்கள் அன்றாட வாழ்வு குறித்து பகிரும் அனுபவக் கதைகளிலிருந்து கற்றுக்கொண்டு எதிர்காலத்தில் தம்மிடம் வரும் நோயாளிகளுக்குச் சிறப்பாக, மேம்பட்ட முறையில் மருத்துவம் பார்க்க முடியும் என்று மோகன் நம்பிக்கை தெரிவித்தார்.

