வட்ட ரயில் பாதையில் ஜனவரி முதல் ஏப்ரல் வரை மேம்பாட்டுப் பணிகள்

2 mins read
414bdbbc-05c8-4b28-afa3-4f8b41ed9ce5
பாய லேபார் எம்ஆர்டி நிலையத்தில் நவம்பர் 25ஆம் தேதி பயணிகள். மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் காலத்தில் இந்த நிலையமும் ரயில் தாமதத்தால் பாதிப்படையும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வட்ட ரயில் பாதையில் 2026ஆம் ஆண்டு, ஜனவரி 17 முதல் ஏப்ரல் 19 வரையில் சுரங்கப்பாதை மேம்பாட்டுப் பணிகள் மூன்று நிலையங்களில் நடைபெறவுள்ளன.

மவுன்ட்பேட்டன், டக்கோட்டா, பாய லேபார் ஆகிய நிலையங்களில் மூன்று மாதங்கள் ரயில்களுக்கான காத்திருப்பு நேரம் 30 நிமிடங்கள்வரை அதிகமாகும் என்று நிலப்போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமை (நவம்பர் 1) ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பணிகள் நடைபெறும் காலத்தில் அம்மூன்று நிலையங்களை மட்டும் இணைக்கும் ரயில்கள் ஒரே தண்டவாளத்தில் 10 நிமிட இடைவெளியில் செயல்படும். இதே சேவையில் தற்போதுள்ள மூன்று நிமிடக் காத்திருப்பைவிட இது அதிகமாகும்.

ஒட்டுமொத்த வட்ட ரயில் பாதையில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள முனையங்கள் உள்பட சுமார் 480,000 பயணிகள் இதனால் பாதிக்கப்படுவர் என்று ஆணையம் எதிர்பார்க்கிறது.

நீர்க் கசிவு, சிறு குறைபாடுகள், சுரங்கம் உருமாறுதல் போன்றவற்றைச் சீரமைக்க இந்த மேம்பாட்டுப் பணிகள் அவசியமாகிறது. பயணிகள் பேருந்துகளையும் மாற்று ரயில் நிலையங்களையும் பயன்படுத்துமாறு ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

வட்டப் பாதையில் அமைந்துள்ள அந்த மூன்று நிலையங்களின் சுரங்கங்கள் மென்மையான கடல் களிமண்ணைக் குடைந்து கட்டப்பட்டவை. ஆதலால் உருமாற்றம் இயற்கையாகவே ஏற்படும். மேலும் ஏற்கெனவே சில குறைபாடுகள் கண்டறியப்பட்டன.

உடனடியான பாதுகாப்பு அபாயம் எதுவும் இல்லை என்றாலும் இந்தக் குறைபாடுகளைக் களையாவிடில், மோசமான சேவைத் தடைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஆணையம் தெரிவித்துள்ளது.

திட்டமிட்டு செயல்படுத்தப்படும் ரயில் சேவைத் தடையில் இதுவே ஆக நீண்டது என்று அறியப்படுகிறது. பயணிகள் மவுன்ட்பேட்டன் அல்லது பாய லேபார் நிலையங்களில் மாற்று ரயில்களை எடுத்து வட்டப் பாதையில் தொடரலாம்.

முழு வட்டப்பாதையிலும் பணிகள் நடைபெறும் மாதங்களில் அனைத்து நிலையங்களிலும் தாமதம் ஏற்படலாம்.

ஜனவரி ஐந்தாம் தேதி முதல் பணிகளால் பாதிப்படையாத நிலையங்களில் உச்ச நேரங்களில் பல இடைவழிப் பேருந்துகள் செயல்படும். அதன்வழியாகப் பயணிகள் மாற்றுப் பயணங்களைச் செய்யலாம் அல்லது தற்காலிகப் பாதைகளுடன் பழக்கப்படுத்திக்கொள்ளலாம்.

தொடக்கத்தில், 62 இணைப்புப் பேருந்துகள் செயல்படுத்தப்படும் என்றும் தேவையைக் கண்காணித்து மாற்றங்கள் செய்யப்படும் என்றும் ஆணையம் கூறியது.

குறிப்புச் சொற்கள்