சிங்கப்பூருக்குள் கடிதங்கள் அனுப்புவோருக்குப் புதிய வசதியாக, சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம் மின்னிலக்க அஞ்சல்தலைகளைப் பொதுமக்களின் சோதனைப் பயன்பாட்டிற்காக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இனி சிங்போஸ்ட் செயலி வழியாக மின்னிலக்க அஞ்சல்தலைகளை வாங்கி எளிதாகக் கடிதங்களை அனுப்பலாம். இதனால் காகித அஞ்சல்தலைகளை ஒட்ட வேண்டிய அவசியமில்லை.
ஒவ்வொரு கொள்முதலின்போதும் உருவாக்கப்படும் தனித்துவக் குறியீட்டை, அஞ்சல் உறையின் மேல்-வலது மூலையில் எழுதினால் போதுமானது. பின்னர் அஞ்சலை வழக்கமான அஞ்சல் பெட்டிகளிலோ அஞ்சல் அலுவலகங்களிலோ குடியிருப்புப் பகுதிகளில் உள்ள மறுஅஞ்சல் பெட்டியிலோ போடலாம்.
ஆசியாவிலேயே முதன்முறையாக அறிமுகமாகியுள்ள இந்த மின்னிலக்க அஞ்சல்தலைகள், உள்நாட்டுக் கடிதங்கள், அஞ்சல் அட்டைகள், காகித உறையிலிட்ட அச்சிடப்பட்ட தாள்களுக்குப் பொருந்தும்.
இவை சாதாரணக் கடிதங்களுக்கு 62 காசு, பெரிய கடிதங்களுக்கு 90 காசு என வழக்கமான கட்டணத்திலேயே கிடைக்கின்றன. குறைந்தது ஐந்து அஞ்சல்தலைகளை வாங்க வேண்டும். அஞ்சல்தலையை வாங்கிய நாளிலிருந்து 24 மாதங்களுக்கு அவை செல்லுபடியாகும்.
எனினும், 2027 ஏப்ரல் 6ஆம் தேதி வரையிலான சோதனைக் காலத்தில், ஐந்து சாதாரண அஞ்சல்தலைகள் $1 விலையிலும், ஐந்து பெரிய அஞ்சல்தலைகள் $1.50 விலையிலும் சலுகைக் கட்டணத்தில் விற்கப்படுகின்றன. ஒரு கணக்கிற்கு ஒரு தொகுப்பு மட்டுமே இந்தச் சலுகை விலையில் கிடைக்கும்.
சிங்கப்பூரின் 61வது தேசிய தினம், உலக அஞ்சல் தினம் இரண்டையும் முன்னிட்டுச் சிறப்பு வடிவமைப்புடன் இந்த அஞ்சல்தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. சிங்போஸ்ட் நிறுவனத்தின் நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது உள்நாட்டு அஞ்சல் சேவையில் வட்டார அளவிலான மைல்கல் நடவடிக்கை என்று சிங்போஸ்ட் கூறியது.
பயனீட்டாளர்கள் செயலி வழியாகத் தங்களின் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதன் தொடர்பில் சிங்கப்பூர் போஸ்ட் நிலையத்தில் அக்டோபர் 8 முதல் 11ஆம் தேதி வரை இலவசச் சாலைக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
