நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க ஆசியான் உலகை உற்று நோக்கவேண்டும்: தினேஷ் வாசு தாஸ்

3 mins read
0b32cd84-6d67-4582-812e-1dac22b48e2d
நல்லிணக்கப் பேராளர்களுடன் சமூக, இளையர்துறை; மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் (நடுவில்) படத்தில் இணைகிறார். - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

தீவிர கருத்தியல்கள் மீண்டும் தலைதூக்கி, கலாசாரப் பன்முகத்தன்மை உலகின் பல்வேறு பகுதிகளில் குறைந்துவரும் போக்கு கூர்ந்து கவனித்து ஆராயத்தக்கது என்று கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் தெரிவித்துள்ளார். 

“உலகின் கிழக்குப் பகுதியில், குறிப்பாகத் தென்கிழக்காசியாவில் நமக்கு நல்லது நடந்துவருகிறது. இங்குள்ள நாடுகள் இளையவை, துடிப்பான பொருளியலைக் கொண்டவை. ஆனால் நாமும் இதுவரை நாம் கட்டிக்காத்து வந்தவை வலுவிழந்து போவதைத் தடுக்க வருங்காலத்தையும் கவனிக்கவேண்டும்,”என்று திரு தினேஷ் கூறினார். 

சமயங்களுக்கும் நம்பிக்கைகளுக்குமான சுதந்திரத்தை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆசிய பசிபிக் வட்டார அமைப்பின் அனைத்துலகக் குழுவுக்கான தொடக்க நிகழ்ச்சியின்போது திரு தினேஷ் அவ்வாறு கூறினார்.

தேசிய வளர்ச்சி அமைச்சுக் கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 23) காலை நடைபெற்ற கூட்டத்தில் ஆசியானைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 15 பேர் திரண்டனர். ஐக்கிய நாட்டுச் சமய சுதந்திரத்திற்கான நிபுணர் டாக்டர் நஸிலா கனியாவும் ‘ரோசஸ் ஆஃப் பீஸ்’ உள்ளூர் நல்லிணக்க அமைப்பின் தலைவருமான முஹம்மது இர்ஷாத்தும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கற்க முன்வந்த வட்டாரப் பங்கேற்பாளர்களுக்கு நன்றி தெரிவித்த திரு தினேஷ், அவர்களிடம் சிங்கப்பூர் கற்க ஏராளமாக உள்ளதாகக் குறிப்பிட்டார். 

நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க ஆசியான் உலகை உற்று நோக்கவேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார்.
நல்லிணக்கத்தைக் கட்டிக்காக்க ஆசியான் உலகை உற்று நோக்கவேண்டும் என்று கலாசார, சமூக, இளையர்துறை, மனிதவளத் துணை அமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கூறியுள்ளார். - படம்: கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு

மேற்கத்திய நாடுகளில், குறிப்பாக ஐரோப்பாவில் ஏற்படும் புலம்பெயர்வைக் குறிப்பிட்ட திரு தினேஷ், அங்குள்ள மக்கள் தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் நாட்டின் பொருளியல் மீது நேரடியான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறினார். 

“முடிவில் ஒரே நாட்டில் நீண்ட நாள் இருப்பவர்கள், புதிதாகக் குடியேறியவர்கள் என இரண்டு பிரிவினர் இருப்பர்,” என்றார் அவர்.  

சிங்கப்பூரின் இன, சமயப் பன்முகத்தன்மை பற்றிப் பேசிய திரு தினேஷ், இனத்தளவில் சீனர்கள் பெரும்பான்மை வகித்தாலும் இந்நாட்டில் பெரும்பான்மை சமயம் என்பது இல்லை என்று குறிப்பிட்டார். அத்துடன், மிகக் குறுகலான நிலப்பரப்பில் எல்லாச் சமயத்தினரும் தத்தம் நம்பிக்கைகளையும் வழக்கங்களையும் பின்பற்றி வருவதாகக் கூறினார். 

“பற்றாக்குறையை எப்படி எங்கள் பலமாக மாற்றினோம்? உண்மையிலேயே பல்லாண்டுகளுக்கு முன்பு இது தொடங்கியது. 1949ல் ‘ஐஆர்ஓ’ என்ற பலசமய அமைப்பின் உருவாக்கத்திலிருந்து தொடங்கியது. சிந்தித்துப் பார்த்தால், இந்த அமைப்பு நவீன சிங்கப்பூருக்கு முன்பே உருவானது,” என்றார் திரு தினேஷ்.

இரண்டாம் உலகப்போரின்போது நிகழ்ந்தவற்றால் களைத்துப்போன சிலர், சமயங்களுக்கு இடையிலான பதற்றத்தை ஒன்றிணைந்து தணிப்பதே சாலச் சிறந்தது எனக் கருதி அந்த அமைப்பை உருவாக்கியதையும் திரு தினேஷ் குறிப்பிட்டார்.

“இருந்தபோதும் சுதந்திரம் அடைந்த பின்னர் சிங்கப்பூர் தன்னை கட்டமைத்துக்கொண்ட முறை, நாட்டின் இன, சமய நல்லிணக்கத்தை உருவாக்குவதில் ஆழமான விளைவை ஏற்படுத்தியது. முதலில் சட்ட உருவாக்கத்தில் தொடங்கியது. எனவே இன, சமய நல்லிணக்கத்திற்கான சட்டங்கள் முக்கியம்,” என்று அவர் கூறினார்.

சட்டங்கள் மட்டுமன்றி, சிண்டா,  சிடிஏசி போன்ற சமூக சுய உதவிக் குழுக்களும் ஹார்மனி சர்க்கர்ஸ் போன்ற நல்லிணக்க அமைப்புகளும் சிங்கப்பூரில் செயல்படுவதை அவர் சுட்டினார்.

கலாசாரப் பன்முகத்தன்மையைப் பேணும் சிங்கப்பூரின் வழிமுறையின் சில கூறுகள் பிற நாடுகளுக்கும் பகிரப்படலாம் என்றும், இதற்காக மற்ற நாடுகள் சிங்கப்பூருடன் இணைந்து மேற்கொண்டு என்ன செய்வது என்பதைப் பற்றி ஆராயலாம் என்றும் திரு தினேஷ் பரிந்துரைத்தார்.

குறிப்புச் சொற்கள்