போக்குவரத்து அதிகாரி ஒருவர் மூத்தோர் ஒருவரிடம் சத்தமாகப் பேசுவது போன்று காணொளி ஒன்று வெள்ளிக்கிழமையன்று (நவம்பர் 21) ‘எஸ்ஜி டெய்லி’ எனும் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டது.
அச்சம்பவத்தில் தொடர்புடைய அதிகாரிமீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து நிறுவனமான ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ தெரிவித்துள்ளது.
நவம்பர் 20ஆம் தேதி இரவு 7 மணியளவில், ஜோகூர் பாரு சோதனைச்சாவடி பேருந்து நிலையத்தில் அச்சம்பவம் நடந்ததாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த சில தகவல்களைக் கொண்டு அறிய முடிகிறது.
“பயணிகளின் பாதுகாப்பிற்காகப் பேருந்தில் ஏறும்போது வரிசையாக ஏறும்படி பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட மூத்தோர், பேருந்துச் சேவை எண் 170ல் வரிசையில் முந்திச்சென்று ஏற முயன்றார். அதை அதிகாரி தடுத்தார்,” என ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ போக்குவரத்து நிறுவனத்தின் பேச்சாளர் கிரேஸ் வூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.
மேலும், “அதிகாரிகள் பலமுறை கூறியும் கேட்காமல் வரிசையை முந்திச்செல்ல முதியவர் முயன்றார். அதனால், அதிகாரி அவரிடம் சத்தமாகப் பேசவேண்டிய சூழ்நிலை உருவானது. இருப்பினும், நிலைமையைச் சற்று பொறுமையாக அதிகாரி கையாண்டிருக்கலாம்,” என்றார் வூ.
இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடப்பதைத் தடுக்கவே ஒழுங்கு நடவடிக்கை எனத் திருவாட்டி வூ குறிப்பிட்டார்.

