போக்குவரத்துக் கண்காணிப்பாளர் ஒருவர் முதியவரிடம் குரலை உயர்த்திக் காணொளி வெளியானதைத் தொடர்ந்து, போக்குவரத்து இயக்குநரான எஸ்பிஎஸ் டிரான்சிட், அந்நபர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘த எஸ்ஜி டெய்லி’யின் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்ட அந்தக் காணொளியில், கண்காணிப்பாளர் பேருந்தின் வாசலுக்கு வெளியே நின்றிருந்த முதியவரிடம், வரிசையில் சென்று நிற்குமாறு கூறி, தகாத வார்த்தை ஒன்றை உரைத்ததைப் பதிவு செய்தது.
நவம்பர் 19 இரவு 7 மணியளவில் ஜோகூர் பாரு சோதனைச் சாவடி பேருந்து நிறுத்தத்தில் இந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பயணிகள் பேருந்தைப் பாதுகாப்பாக ஏறுவதை உறுதி செய்துகொண்டிருந்த அந்த ஊழியர், 170 எண் கொண்ட பேருந்தில் அந்த முதியவர் வரிசையைத் தாண்டி ஏறுவதைத் தடுத்ததாக இந்தச் சம்பவம் தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளித்த ‘எஸ்பிஎஸ் டிரான்சிட்’ செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வூ குறிப்பிட்டார்.
போக்குவரத்துக் கண்காணிப்பாளர் நிலைமையை அமைதியாகவும் தொழில்நெறியுடனும் கையாண்டிருக்கலாம் என்று திருமதி வூ கூறினார்.
“இதுபோன்றதொரு நிலைமை மீண்டும் நடக்காமல் இருக்கவே ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது,” என்றும் அவர் விளக்கினார்.

