மத்திய கிழக்குப் போரால் எரிசக்தி விலைகள் அதிகரித்துள்ள நிலையில் ஒருசில மின்சார விநியோக நிறுவனங்கள் புதிய சலுகைகளையும் திட்டங்களையும் வழங்கியுள்ளன.
ஒரே விலை திட்டங்கள் மூலம் அதிகமான வீடுகள் மின்சாரக் கட்டணத்தை மாற்றமில்லாமல் வைத்திருக்க முயல்கின்றன.
ஒரே விலை திட்டங்களில் இணைந்த வீடுகளின் எண்ணிக்கை இவ்வாண்டு பிப்ரவரி 1ஆம் தேதி நிலவரப்படி 36.6 விழுக்காடாக இருந்தது.
அது செப்டம்பர் 1ஆம் தேதி நிலவரப்படி 38.4 விழுக்காட்டுக்கு அதிகரித்ததாக எரிசக்தி சந்தை ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பகிர்ந்துகொண்டது.
அதே காலகட்டத்தில், முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் எஸ்பி குழுமம் மூலம் மின்சாரம் வாங்கும் வீடுகளின் விகிதம் 63.4 விழுக்காட்டிலிருந்து 61.6 விழுக்காடாகக் குறைந்தது.
மொத்த விற்பனை விலையில் 0.1 விழுக்காட்டுக்கும் குறைவான வீடுகளே மொத்த விற்பனை விலையில் மின்சாரத்தை வாங்குகின்றன.
அதிகரிக்கக்கூடிய கட்டணங்களிலிருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முயலும் வாடிக்கையாளர்கள், குறிப்பிட்ட காலகட்டத்தில் உருவான புதிய வீடுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஒரே விலை திட்டங்களில் இணைந்த வீடுகளின் எண்ணிக்கை உயர்ந்திருக்கலாம் என்று ஆணையப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
எஸ்பி குழுமம் நிர்ணயித்து ஆணையம் முறைப்படுத்திய மின்சாரக் கட்டணம் பெரும்பாலும் எரிசக்திச் செலவுகளை அடிப்படையாகக் கொண்டது.
அது, பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுக்கும் ஈரானுக்கும் இடையில் மூண்ட சண்டையைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
ஒவ்வோர் காலாண்டுக்கும் மறுஆய்வு செய்யப்படும் கட்டணம், தற்போது ஒரு கிலோவாட் மணிநேரத்துக்கு 31.91 காசாக உள்ளது.
நான்காம் காலாண்டுக்கான கட்டணங்கள் குறித்து இந்த வாரம் பிற்பாதியில் அறிவிக்கப்படும்.
சிங்கப்பூரின் ஆகப் பெரிய மின்சார விநியோக நிறுவனமான செனெக்கோ, கிட்டத்தட்ட 175,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்குகிறது.
இவ்வாண்டின் மூன்றாம் காலாண்டில் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டதை அடுத்து ஒரே விலை திட்டத்திற்கான சலுகையை செனெக்கோ அறிவித்தது.
எஸ்பி குழுமத்திலிருந்து மாறும் வாடிக்கையாளர்களுக்குக் கூடுதலாக $200 கழிவு வழங்கப்படும் என்றும் அது குறிப்பிட்டது.
பசிபிக்லைட் எனெர்ஜி நிறுவனம், ஜூலை மாதத்தில் கட்டணத் திட்டத்தில் கழிவுகளை அறிவித்தது. முறைப்படுத்தப்பட்ட கட்டணத்தில் வாடிக்கையாளர்களுக்கு அது 18 விழுக்காட்டுத் தள்ளுபடி அளித்தது.
கெப்பல் எலெக்ட்ரிக் நிறுவனம், ஷுவர்சேவ் தள்ளுபடி திட்டத்தை மீண்டும் அறிமுகம் செய்தது. மார்ச் மாத நடுப்பகுதியில் தனது இணையத்தளத்திலிருந்து நிறுவனம் அந்தத் திட்டத்தை நீக்கியிருந்தது.
