நீதிமன்றத் தீர்ப்பில் உடன்பாடு இருக்கிறதோ இல்லையோ, பொதுமக்கள் மத்தியில் எவ்வளவு அதிருப்தி நிலவினாலும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் நேர்மையையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் தலையாய கடமையாகும்.
தீர்ப்பு குறித்து உடன்பாடு இல்லையென்று கருதினால் சட்டத்தைத் திருத்த வேண்டுமே தவிர, நாடாளுமன்றத்திலோ பொதுவெளியிலோ நீதித்துறையை விமர்சிக்கவோ தாக்கவோ கூடாது என்று மூத்த அமைச்சரும் தேசியப் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான கா.சண்முகம் கூறியுள்ளார்.
வியாழக்கிழமை (நவம்பர் 26) நடைபெற்ற உலகளாவிய சட்டமுறை ஆட்சி மாநாட்டில் நிறைவுரையாற்றிய அவர், சிங்கப்பூரில் சட்டத்தின் ஆட்சி சிறப்பாகச் செயல்படுவதற்கு அரசாங்கம், நாடாளுமன்றம், நீதித்துறை ஆகிய மூன்று அமைப்புகளுக்கு இடையிலான பரஸ்பர மரியாதையும் தெளிவான அதிகார வரம்புகளுமே காரணம் எனக் குறிப்பிட்டார்.
“அரசியல்வாதிகளைப் போல நீதிபதிகள் பொதுவெளியில் வந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள முடியாது என்பதால், நீதித்துறையின் நன்மதிப்பு ஒருமுறை சிதைந்தால் அதனை மீண்டும் கட்டியெழுப்புவது மிகவும் கடினம்,” என திரு சண்முகம் சொன்னார்.
சமூக ஊடகங்களின் வளர்ச்சியால் நீதிபதிகளை விமர்சிப்பது பல நாடுகளில் வழக்கமாகிவிட்டதாக குறிப்பிட்ட அவர், அதற்கு பிரிட்டனில் நீதித்துறையை மேற்கோள் காட்டினார். அங்கு நீதித்துறையை இழிவுபடுத்தும் குற்றச்சட்டம் நீக்கப்பட்டதால் அந்நாட்டு நீதிபதிகளின் நன்மதிப்பு சரிந்ததை திரு சண்முகம் சுட்டிக்காட்டினார்.
சிங்கப்பூரில் அத்தகைய நிலை ஏற்படுவதைத் தடுக்க 2016ல் நீதி நிர்வாகப் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
சர்ச்சைக்குரிய வழக்குகளில் கையாளப்பட்ட முதிர்ச்சி
2018ல் சிட்டி ஹார்வெஸ்ட் தேவாலய வழக்கில், நிறுவன இயக்குநர்களை முகவர்களாகக் கருத முடியாது என மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பினால் அவர்களுக்குக் குறைந்த தண்டனை கிடைத்தபோது, சமூக ஊடகங்களில் நீதிபதிகளுக்கு எதிராகக் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அப்போது நாடாளுமன்றத்தில் தாம் அமைச்சர்நிலை அறிக்கை வெளியிட்டதைக் குறிப்பிட்ட திரு சண்முகம், நீதிபதிகளின் நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குவதை ஒருபோதும் ஏற்க முடியாது எனத் தெளிவுபடுத்தியதோடு, பின்னர் தண்டனைச் சட்டத்தின் 409வது பிரிவில் திருத்தம் கொண்டுவந்து அதனைச் சரிசெய்ததையும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல், தண்டனைச் சட்டத்தின் 377வது ‘ஏ’ பிரிவு தொடர்பான வழக்கில், சமூகப் பிளவைத் தவிர்க்க நீதிமன்றம் தனது வரம்பிற்குள் நின்று முடிவெடுத்ததையும், அதனைத் தொடர்ந்து அரசாங்கம் எண்ணற்ற சமயத் தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகளுடன் கலந்தாலோசித்து, இவ்விவகாரத்திலும் இதே நிலைப்பாடே கடைப்பிடிக்கப்பட்டது.
இது, அரசு அமைப்புகளின் முதிர்ச்சிக்குச் சான்றாகத் திகழ்ந்தது எனவும் திரு சண்முகம் விவரித்தார்.
சட்டத்தின் ஆட்சி, நாட்டின் வளர்ச்சிக்கு அவசியமான நிபந்தனை எனும் கருத்து அமைச்சரின் உரையில் முக்கிய இடம்பிடித்தது.
வெளிநாட்டு நேரடி முதலீட்டிற்கான இலக்குப் பொருளியலாக உலகில் அமெரிக்காவுக்கு அடுத்து சிங்கப்பூர் இரண்டாம் இடத்தில் இருப்பதாகக் கூறிய திரு சண்முகம், அப்பட்டியலில் உள்ள ஒவ்வொரு பொருளியலும் சிங்கப்பூர், ஹாங்காங், ஐக்கிய அரபுச் சிற்றரசுகளைத் தவிர, குறிப்பிடத்தக்க உள்நாட்டுச் சந்தையைக் கொண்டுள்ளதாக விளக்கினார்.
அவ்வகையில், "சந்தை இல்லை, இயற்கை வளம் இல்லை, ஆனாலும் முதலீட்டில் உலகில் இரண்டாம் இடம் சிங்கப்பூருக்கு உள்ளது. சட்டத்தின் ஆட்சி இல்லாவிட்டால் சிங்கப்பூர் வெற்றிகரமான பொருளியலாக இருந்திருக்காது,” என்றார் அவர்.
2014ல் இங்கிலாந்து, வேல்ஸ் நீதிபதிகளிடம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 62 விழுக்காட்டினர், பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட சமூகத்தால் நீதிபதிகள் குறைவாக மதிக்கப்படுவதை உணர்ந்ததாகவும் 96 விழுக்காட்டினர் ஊடகங்களால் மதிக்கப்படுவதாக உணரவில்லை என்றும் தெரிவித்திருந்ததையும் அமைச்சர் சுட்டினார்.
அத்தகைய நிலைமை சிங்கப்பூரில் ஏற்படுவதை அனுமதிக்கக்கூடாது எனச் சொன்ன திரு சண்முகம், சிங்கப்பூர் நீதித்துறை உயர்ந்த அளவிலான மக்கள் நம்பிக்கையையும் மதிப்பையும் பெற்றுள்ளது என்றும் அந்த நிலை ஒருமுறை சிதைந்துவிட்டால், அதை மீட்பது மிகவும் கடினமாக இருக்கும் என்றும் கூறினார்.
