பாலியல் ரீதியான ஒழுங்கீன நடத்தைக்காக மருத்துவருக்குச் சிறை

2 mins read
8bf7b07b-1ff2-4bc4-a6d1-d42925a19933
அரசு நீதிமன்றம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங் பொது மருத்துவமனையைச் சேர்ந்த முன்னாள் மருத்துவர் ஒருவருக்கு திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று 31 வயது பெண் ஒருவர் குளியலறையில் இருப்பதைப் படம் பிடித்ததற்காக எட்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

34 வயதான ஜோனத்தன் சோ ஜிங்யாவோவைப் பரிசோதித்த மனநலக் கழகத்தின் அறிக்கை, அவரது பாலியல் ரீதியான ஒழுங்கீன நடத்தைக்குச் சிகிச்சையளிக்க, கட்டாய சிகிச்சை உத்தரவு பெறத் தகுதியானவர் என்று மதிப்பிட்ட போதிலும், அவருக்குச் சிறைவாசமே மிகவும் பொருத்தமானது என்று நீதிபதி தெரிவித்தார்.

ஒரு கட்டாய சிகிச்சை உத்தரவு என்பது ஒரு சமூக அடிப்படையிலான தண்டனையாகும். இது சில மனநல நிலைமைகளால் பாதிக்கப்பட்ட ஒரு குற்றவாளியைச் சிகிச்சைக்கு உட்படுத்துகிறது.

பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைக் கட்டிக்காக்கும் பொருட்டு, அவருக்கும் மருத்துவருக்கும் உள்ள உறவு பற்றி நீதிமன்ற ஆவணங்களில் உள்ள தகவல் அகற்றப்பட்டது.

ஏப்ரல் 11, 2024 அன்று மாலை சுமார் 6 மணியளவில், ஜோனத்தன் பாதிக்கப்பட்டவருடன் ஒரு வீட்டில் இருந்தார்.

சமையலறைக்கு அருகிலுள்ள பொதுக் கழிப்பறையில் பாதிக்கப்பட்டவர் குளிப்பதை ஜோனத்தன் கேட்டதும், அவர் சமையலறைக்குச் சென்று, பாதிக்கப்பட்டவர் குளிப்பதைப் பதிவு செய்ய சன்னல் அருகே தனது கைப்பேசியை வைத்திருந்தார். கைப்பேசியைப் பார்த்த மாது கூச்சலிட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் குளிக்கும் காணொளியைப் பார்க்காமலேயே அதை ஜோனத்தன் நீக்கிவிட்டார். பின்னர் அவர் மாதின் படுக்கையறைக் கதவைத் தட்டி, அவரிடம் மன்னிப்பு கேட்டார்.

பாதிக்கப்பட்ட பெண் தனது காதலனிடம் நடந்ததைச் சொன்னவுடன், காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிங்கப்பூர் மருத்துவ மன்றத்தின் இணையத்தளத்தில், ஜோனத்தன் ஒரு மருத்துவராகப் பட்டியலிடப்பட்டுள்ளார். அவரது பணிச் சான்றிதழ் இம்மாத இறுதியில் காலாவதியாகிறது.

குறிப்புச் சொற்கள்