சிங்கப்பூரில் 2020ஆம் ஆண்டு மதுபோதையில் வாகனம் ஓட்டிய நபர் விபத்தை ஏற்படுத்தியதால் 40 வயதுகளில் உள்ள மோட்டார் சைக்கிளோட்டி ஒருவர் மாண்டார்.
“மோட்டார் சைக்கிளோட்டி பலத்த காயங்களுடன் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். அவருக்கு உடனடி சிகிச்சை வழங்கப்பட்டது, இருப்பினும் அவர் இறப்பதைத் தடுக்கமுடியவில்லை,” என்று கவலையுடன் தெரிவித்தார் அவசர சிகிச்சைப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் ராஜ் மேனன்.
“விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற அனைத்துவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் அதிக ரத்தம் வெளியேறியதால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை,” என்றார் டாக்டர் மேனன்.
மோட்டார் சைக்கிளோட்டி உயிரிழந்த தகவலை அவரது குடும்பத்தினரிடம் கூறியது இன்னும் தனது நினைவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
“மதுபோதையில் வாகனம் ஓட்டுவதால் தேவையில்லாமல் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மது குடிப்பவர்கள் சாலையில் பயணம் மேற்கொள்பவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். அலட்சியமாகச் செயல்படுவது மற்றவர்களுக்கு பெரிய இழப்புகளைக் கொடுக்கும்,” என்று டாக்டர் மேனன் கூறினார்.
விழாக் காலங்களில் மது குடித்துவிட்டு விபத்துக்குள்ளாக்கும் போக்கு அதிகரித்து வருவதையும் அவர் சுட்டினார்.
மதுபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது என்பது குறித்துக் கடந்த நவம்பர் மாதம் விழிப்புணர்வுப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
“இவ்வாண்டு மதுபோதையில் வாகனம் ஓட்டி மற்றவர்களுக்குக் காயம் ஏற்படுத்தும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என்று உள்துறைக்கான மூத்த துணையமைச்சர் சிம் ஆன் விழிப்புணர்வுப் பிரசாரத்தின்போது கூறினார்.
2025ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியதற்காக 1,173 பேர் கைது செய்யப்பட்டனர். அதேகாலகட்டத்தில் 2024ஆம் ஆண்டு 1,130 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மட்டும் காயம் விளைவித்த 3,740 விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
2020ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு காலகட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக டாக்டர் மேனன் கூறினார்.
விபத்தில் சிக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் மோட்டார் சைக்கிளோட்டிகள், சைக்கிளோட்டிகள், நடையர்கள். அவர்களின் வயது 25க்கும் 44க்கும் இடையில் உள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.

