பேரங்காடியில் தங்களுக்கு விருப்பமான உணவுப் பொருள்களைத் தேர்ந்தெடுத்துத் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பையில் நிரப்பும் வாய்ப்பை ஏறத்தாழ 25 சிறார்கள் பெற்றனர்.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.
நிகழ்ச்சியின்போது ‘கிறிஸ்துமஸ் ஸ்டாக்கிங்’ எனப்படும் பரிசுப் பொருள்களை நிரப்புவதற்கான துணி உறை ஒவ்வொரு சிறுவர்க்கும் வழங்கப்பட்டது.
கடையில் கிடைக்கக்கூடிய தங்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் கொண்டு பிள்ளைகள் அந்த உறையை நிரப்பலாம்.
பண வரம்பு ஏதுமின்றி, தாங்கள் தேர்ந்தெடுக்கும் பொருள்களைச் சிறார்கள் இலவசமாகப் பெற்றனர்.
இதனால் மகிழ்ச்சி அடைந்த அவர்களின் சிரிப்பொலி, கடை முழுவதும் விழாக்கால உணர்வைப் பரப்பியது.
கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனம், ஜூ சியாட் வட்டாரத்தின் சமய நல்லிணக்க அமைப்புகள், அறநிறுவனங்கள் ஆகியவை சமூகத் தலைவர்களோடு இணைந்து ‘கிறிஸ்துமஸ் ஃபார் எவ்ரிவொன்’ நிகழ்ச்சியை வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) நடத்தின.
சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சட்ட அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூர் மூளைக்கட்டி சங்கம் (Brain Tumour Society of Singapore) உட்பட வெவ்வேறு அமைப்புகளைச் சேர்ந்த சிறார்களோடு சேர்ந்து சிக்லாப் வி கடைத்தொகுதியின் கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடியில் பொருள்களை வாங்கினார்.
தொடர்புடைய செய்திகள்
உள்துறை இரண்டாம் அமைச்சருமான திரு டோங், “அனைவரும் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒரே அளவிலான பிரம்மாண்டத்துடன் கொண்டாடும் வசதியைப் பெற்றிருப்பதில்லை. ஒரு சமூகமாக ஒன்றிணைந்து இந்தக் கொண்டாட்டத்தை அனைவருக்கும் முடிந்த வரை கோலாகலமாக மாற்றுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்,” என்று கூறினார்.
பங்கேற்ற பிள்ளைகளில் ஒருவரான ஏழு வயது ஆவியான் “எனக்கு மிகவும் பிடித்த பனிக்கூழை நான் எடுத்துக்கொண்டேன். அதிலும், சாக்லெட் பனிக்கூழ் மிகவும் பிடிக்கும் என்பதால் அதை மட்டும் எடுத்தேன்,” என்று ஆர்வத்துடன் பகிர்ந்துகொண்டார்.
பிற பண்பாடுகளைப் பற்றிய புரிதலை மேம்படுத்த இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் உதவியாக இருக்கும் என்று ஆவியானின் தாயார் அஷ்டலட்சுமி, 39, தெரிவித்தார்.
செண்பக விநாயகர் ஆலயத்தைப் பிரதிநிதித்து பங்கேற்ற திருவாட்டி ஷண்முகசுந்தரம், “இளைய தலைமுறைக்காக இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது முக்கியம். அவர்களது தனிப்பட்ட மனப்போக்கை வடிவமைக்க இந்நிகழ்ச்சி, நல்ல தொடக்கத்தைத் தருகிறது,” என்றார்.
இந்நிகழ்ச்சியை ஒட்டி, ஜூ சியாட், பார்க்வே பரேட், தெம்பனிஸ்1 ஆகிய இடங்களில் புதிய உணவு நன்கொடை பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கோல்ட் ஸ்டோரேஜ் நிறுவனமும் சிங்கப்பூர் உணவு வங்கியும் இணைந்து முன்னெடுக்கும் இத்திட்டத்தின் காரணமாக அந்தப் பேரங்காடி, 24 உணவு வங்கிச் சேகரிப்பு நிலையங்களை நடத்தி வருகிறது.
சேகரிக்கப்பட்ட உணவுப் பொருள்கள் ஏழு பயனாளி அமைப்புகளுக்குப் பிரித்து வழங்கப்படும். இவ்வமைப்புகளில் ஸ்ரீ செண்பக விநாயகர் ஆலயம், முஸ்லிம் சிறுநீரக செயல்பாட்டுச் சங்கம் உள்ளிட்டவை அடங்கும்.

