சோதனைச்சாவடிகளில் போதைப்பொருள் கைது 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிப்பு

சோதனைச்சாவடிகளில் போதைப்பொருள் கைது 50 விழுக்காட்டுக்கும் மேல் அதிகரிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

29 Sep 2026 - 9:03 pm

2 mins read

சிங்கப்பூர் சோதனைச்சாவடிகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், அதிகாரிகளின் சோதனைகளில் இருந்து தப்பிக்க புதிய வழிகளைக் கையாண்டு வரும் நிலையில், அங்கு மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

2025ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் சோதனைச்சாவடிகளில் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக மொத்தம் 975 பேர் கைது செய்யப்பட்டதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையமும் மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 29) தெரிவித்தன. இது, 2024ஆம் ஆண்டில் பதிவான 635 கைதுகளுடன் ஒப்பிடுகையில் ஏறத்தாழ 53 விழுக்காடு அதிகமாகும்.

போதைப்பொருள் இறக்குமதி, கைவசம் வைத்திருத்தல் மற்றும் பயன்படுத்துதல் ஆகிய குற்றங்களுக்காக இந்தக் கைதுகள் மேற்கொள்ளப்பட்டன.

பயணிகள் கொண்டுவரும் தனிப்பட்ட உடைமைகளுக்குள்ளும் வாகனங்களின் ரகசிய பகுதிகளுக்குள்ளும் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டது.

உள்துறை அமைச்சைச் சேர்ந்த அமைப்புகள் 2025ஆம் ஆண்டில் சோதனைச்சாவடிகளில் 1,417 கூட்டுச் சோதனைகளை நடத்தின. 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட 1,053 சோதனைகளுடன் ஒப்பிடுகையில் இது 34 விழுக்காடு அதிகமாகும்.

அதிகாரிகளின் இந்தத் தீவிர நடவடிக்கைகளும் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுமே இந்தக் கைதுகளின் உயர்வுக்குக் காரணம் என்று அதிகாரிகள் கூறினர்.

2025 ஜூலை மாதத்தில், சாங்கி விமான நிலையத்தின் நான்காம் முனையப் பயணிகள் பகுதியில் பெண்களின் பயணப்பெட்டிகளில் இருந்த பொம்மைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 25 கிலோவுக்கும் அதிகமான ‘கொக்கைய்ன்’ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் ஹாங்காங் காவல்துறையின் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவும் பரிமாறிக்கொண்ட உளவுத் தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் மாதம் 23ஆம் தேதியன்று துவாஸ் சோதனைச்சாவடியில் மலேசியாவில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றின் பெட்டியில் பலகாரப் பொட்டலங்கள் போல மறைத்து வைக்கப்பட்டிருந்த 9 கிலோ போதைப்பொருளைக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணைய அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்தக் கடத்தல் முயற்சியில் ஈடுபட்ட மலேசிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தெம்பனிசில் நடத்தப்பட்ட தொடர் நடவடிக்கையில் 1.5 கிலோ போதைப்பொருளுடன் சிங்கப்பூர் ஆடவர் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்
போதைப்பொருள்கைதுசோதனைச்சாவடி