சாங்கி விமான நிலைய முனையம் ஒன்றில் பயணிகள் வெளியேறும் பகுதியில் மதுபோதையில் ஆடவர் குழப்பம் விளைவித்த சம்பவம் குறித்து சனிக்கிழமை (அக்டோபர் 5) காலை 9.20 மணிக்கு தகவல் கிடைத்ததாக காவல்துறை அறிக்கை ஒன்றை திங்கட்கிழமை (அக்டோபர் 6) வெளியிட்டது.
கடப்பிதழை முறையாக வழங்கும்படி கேட்டுக்கொண்ட பணியில் இருந்த துணைக் காவல்துறை அதிகாரி ஒருவரைத் தகாத வார்த்தைகளால் அந்த 28 வயது கனடா நாட்டவர் பலமுறை திட்டியுள்ளார். அவ்வாறு செய்துவிட்டு கடந்து செல்ல முயன்றபோது விமான நிலையக் காவல்துறை அதிகாரிகள் அவரைத் தடுத்துள்ளனர். அவர்களையும் வசைபாடிய ஆடவர், ஒரு அதிகாரியைத் தள்ளி விட்டதோடு, தமது நகங்களால் காயப்படுத்தியுள்ளார்.
காயமடைந்த விமான நிலைய காவல்துறை அதிகாரிக்கு இரண்டுநாள் மருத்துவ விடுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விளைவாக ஆடவர் கைதானார்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7) நீதிமன்றத்தில் அவர்மீது குற்றஞ்சாட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரையோ, பொதுப் பணியாளர்களையோ வன்முறைக்கு உட்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.