மின்சிகரெட் விற்பனை குறித்து விளம்பரம் செய்த பதின்ம வயதுப் பெண்ணுக்கு 18 மாதம் நன்னடத்தைக்கால உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
அல்பி சாய் புவோ இன் என்னும் 20 வயது இளம்பெண் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
நன்னடத்தைக்காலத்தில் அல்பி இரவு 10 மணியிலிருந்து காலை 6 மணிவரை வீட்டிற்குள் இருக்க வேண்டும். மேலும் அவர் 50 மணி நேரம் சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அல்பி, ‘வாட்ஸ்அப்’ செயலி மூலம் மின்சிகரெட் விற்பனையை விளம்பரம் செய்தார்.
அதன்பின்னர் சுகாதார அறிவியல் ஆணைய அதிகாரிகள் ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள அல்பியின் வீட்டைச் சோதனையிட்டனர். அப்போது அங்கு மின்சிகரெட்டுகளும் அதுசார்ந்த பொருள்களும் கைப்பற்றப்பட்டன.
அல்பியின் கைப்பேசியை அதிகாரிகள் ஆராய்ந்தபோது, அவர் ஜோகூர் பாருவில் மின்சிகரெட்டுகளை வாங்கத் தனது நண்பர்களுக்கு உதவியது கண்டறியப்பட்டது. மேலும் சிங்கப்பூருக்குள் மின்சிகரெட்டுகளைக் கொண்டுவர அல்பி ஏற்பாடு செய்ததும் வெளிச்சத்திற்கு வந்தது.

