பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 3.5 விழுக்காடாகக் குறைப்பு

பொருளியல் வளர்ச்சி முன்னுரைப்பு 3.5 விழுக்காடாகக் குறைப்பு

2 mins read
c0e0f1b2-b205-486c-8cb4-daee3caa6498
ஆண்டு அடிப்படையில் 2026ன் முதல் காலாண்டில் பொருளியல் 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முன்னைய ஆய்வின் 5.8 விழுக்காடு வளர்ச்சி முன்னுரைப்பைவிட இது சற்று அதிகம். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தனியார் துறை பொருளாதார வல்லுநர்கள், 2026ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் பொருளியல் 3.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று எதிர்பார்க்கிறார்கள். இது அவர்களின் முந்தைய கணிப்பான 3.6 விழுக்காட்டை விட சற்றே குறைவு ஆகும்.

வீட்டு உபயோகப் பொருள்கள், சேவைகளுக்காக குடும்பங்கள் செய்யும் செலவு குறைந்தது இதற்கு முக்கியக் காரணம்.

சிங்கப்பூர் நாணய ஆணையம் அண்மையில் நடத்திய பொருளியல் வல்லுநர்களின் அண்மைய காலாண்டு ஆய்வில் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்கா - ஈரான் இடையே ஜூன் 14ஆம் தேதி ஏற்பட்ட 60 நாள் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு முன்னதாக, மே 25ஆம் தேதி இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

மத்திய கிழக்கில் நிலவிய பதற்றம் காரணமாக பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் அதனால் மக்கள் செலவைக் குறைப்பார்கள் என்றும் வல்லுநர்கள் கணித்திருந்தனர்.

அண்மைய கணிப்பு மார்ச் மாத ஆய்வின் 3.6 விழுக்காடு எனும் கணிப்பைவிடக் குறைவு. எனினும், வர்த்தக, தொழில் அமைச்சின் விழுக்காடு முதல் 4 விழுக்காடு வரை எனும் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டைவிட அதிகம்.

ஆண்டு அடிப்படையில் 2026ன் முதல் காலாண்டில் பொருளியல் 6 விழுக்காடு வளர்ச்சியடைந்தது. முன்னைய ஆய்வின் 5.8 விழுக்காடு எனும் வளர்ச்சி முன்னுரைப்பைவிட இது சற்று அதிகம்.

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி பொருளிலுக்குச் சாதகமாக இருக்கும் என வல்லுநர்கள் நம்புகின்றனர்.

பயனீட்டாளர் செலவினக் கணிப்பு 3.2 விழுக்காடாகக் குறைக்கப்பட்டாலும், பிற முக்கிய துறைகளின் வளர்ச்சி இதனை ஈடுசெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது:

அதேவேளையில், 2026ஆம் ஆண்டிற்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 2.3 விழுக்காடாகவும் அடிப்படைப் பணவீக்கம் 2 விழுக்காடாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு சந்தையைப் பொறுத்தவரை, ஆண்டின் இறுதியில் வேலையின்மை விகிதம் 2.1 விழுக்காடாகவே நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2027ஆம் ஆண்டிற்கான பொருளியல் வளர்ச்சி விகிதக் கணிப்பு மாற்றம் இன்றி 2.5 விழுக்காடாகவே நீடிக்கிறது.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்நாணய ஆணையம்சிங்கப்பூர் நாணய ஆணையம்பொருளியல்வளர்ச்சிவல்லுநர்அமெரிக்காஈரான்