சிங்கப்பூரில் உள்ள இரண்டு மீன் பண்ணைகள் புதிய உரிமையாளர்களைப் பெறவுள்ளன.
65 மில்லியன் வெள்ளி மதிப்புடைய எட்டு மாடி மீன் பண்ணையை உள்ளூர் நிறுவனமான அக்குவா-சாம்ப் (AquaChamp) வழிநடத்தும்.
இதற்கு முன்னர் அந்த எட்டு மாடி மீன் பண்ணையை அப்போலா அக்குவாகல்ச்சர் (Apollo Aquaculture) குழுமம் வைத்திருந்தது. 2022ஆம் ஆண்டு நிதி சார்ந்த பிரச்சினைகளை அந்நிறுவனம் எதிர்நோக்கியதால் மீன் பண்ணையை அது கைவிட்டது.
அக்குவாசாம்ப் நிறுவனம் நிலத்தில் மீன் வளர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுகிறது. அது உள்ளூர் கட்டுமான நிறுவனமான ஹெச்பிசி பில்டர்ஸ் (HPC Builders) கீழ் செயல்படுகிறது.
நியோ தியூ கிரசெண்டில் உள்ள அந்த எட்டு மாடி மீன் பண்ணையில் இறால் மற்றும் உணவு மீன்கள் வளர்க்கப்பட்டன.
மற்றொரு மீன் பண்ணையானது தீவின் தெற்கு கடல் பகுதியில் செயல்படுகிறது. கடலில் கூண்டுகள் வைத்து மீன்கள் வளர்க்கப்படுகின்றன.
சிங்கப்பூர் அக்குவாகல்ச்சர் டெக்னாலஜிஸ் (Singapore Aquaculture Technologies) அந்த மீன் பண்ணையை இனி வழிநடத்தும். இந்த நிறுவனம் ஜோகூர் நீரிணையின் வடக்குப் பகுதியில் உட்புற மிதக்கும் பண்ணைகளைக் கையாள்கிறது.
இதற்கு முன் இந்தக் கடல் கூண்டு மீன் பண்ணையின் உரிமையாளராக பார்ராமுண்டி குழுமம் இருந்தது. நிதி சார்ந்த பிரச்சினைகளால் பார்ராமுண்டி குழுமம் பண்ணையைக் கைவிட்டது.
தொடர்புடைய செய்திகள்
2022ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூரில் பல மீன் பண்ணைகள் தங்களது நடவடிக்கைகளை நிறுத்தின. இருப்பினும் புதிய உள்ளூர் நிறுவனங்கள் மீன் பண்ணை வைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

