ஜூரோங் ஈஸ்ட்டில் திங்கட்கிழமை (டிசம்பர் 15) அன்று எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து தொடர்பான விபத்தில் சிக்கிய 77 வயது முதியவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
டிசம்பர் 15 அன்று காலை 10.45 மணிக்கு ஜூரோங் ஈஸ்ட் சென்ட்ரல், ஜூரோங் கேட்வே சந்திப்பில் நடந்த விபத்து குறித்து தங்களுக்குத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த முதிய பாதசாரி இங் டெங் ஃபோங் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவுடன் இருந்தார்.
65 வயதான ஆண் பேருந்து ஓட்டுநர், காவல்துறை விசாரணையில் உதவி வருகிறார்.
“இந்த விபத்து குறித்து நாங்கள் வருந்துகிறோம். மேலும் பாதசாரி குணமடைந்து வருவதில் எங்கள் முன்னுரிமை உள்ளது,” என்று எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனச் செய்தித் தொடர்பாளர் கிரேஸ் வூ கூறினார்.
“எங்கள் அக்கறையை வெளிப்படுத்தவும், எங்களால் முடிந்தவரை உதவி, ஆதரவை வழங்கவும் அவரது குடும்பத்தினருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறோம்,” என்றும் கூறினார் திருவாட்டி வூ.
காவல்துறையினரின் விசாரணையில் எஸ்பிஎஸ் டிரான்சிட் உதவி வருவதாகவும் திருமதி வூ மேலும் கூறினார்.

