பொதுத் தேர்தல் நெருங்கும் நிலையில், இணையம் மூலம் பிரசாரம் செய்யும்போது அதற்கான இணையக் கணக்குகளுக்கு வலுவான பாதுகாப்பு அம்சங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
‘டீப்ஃபேக்’ ஆள்மாறாட்டங்கள் குறித்து தேர்தல் வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சிகள் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்றும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு ஆணையம் கேட்டுக்கொண்டது.
மேற்கொள்ளப்பட வேண்டிய ஏழு நடவடிக்கைகள் குறித்த விவரங்களைக் கொண்ட அறிக்கையை ஆணையம் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டது.
இணையம் வழி ஊடுருவல்கள் மூலம் தேர்தல் முறை மீது பொதுமக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படக்கூடும் என்றும் பிரசார முயற்சிகளுக்கு இடையூறு விளைவித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு அவப்பெயர் ஏற்படக்கூடும் என்றும் ஆணையம் எச்சரிக்கை விடுத்தது.
இணையம் வழி பிரசாரத்துக்கான இணையக் கணக்குகளுக்கு யாராலும் ஊகிக்க முடியாத மறைச்சொற்களைப் பயன்படுத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கணக்கைப் பயன்படுத்துபவரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் பல அடுக்கு முறையை நடைமுறைப்படுத்துமாறு அரசியல் கட்சிகள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இணையம் வழி பிரசாரத்துக்கான கட்டமைப்பு மீள்திறனுடன் இருக்க, ஒரு தளம் தடைப்பட்டால் வேறொரு தளம் தயாராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் பதிவிடும் கருத்துகள் தடையின்றி பொதுமக்களைச் சென்றடையத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும் ஆணையம் அறிவுறுத்தியது.
இணையப் பாதுகாப்புக்குப் பங்கம் ஏற்பட்டால் அதை உடனடியாக அடையாளம் காண பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
சந்தேகத்துக்குரிய இணைய நடவடிக்கைகள் குறித்து தெரியவந்தால் அதுகுறித்து உடனடியாகப் புகார் அளிக்க பிரசார ஊழியர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியது.
மேலும், மென்பொருள் புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

