சிங்கப்பூரில் அதிகமான இளையர்கள் மன உளைச்சலுடன் தொடர்புடைய வயிற்றுவலி, தலைவலி, நெஞ்சுவலி ஆகியவற்றுக்காக கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மீண்டும் மீண்டும் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பதின்ம வயதினரில் கிட்டத்தட்ட 17 விழுக்காட்டினரிடம் மன உளைச்சல் தொடர்பான வலிகள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டில் அந்த எண்ணிக்கை 12 விழுக்காடாக இருந்ததைப் பகிர்ந்துகொண்டார் கே.கே மருத்துவமனையின் அவசர மருத்துவப் பிரிவின் மூத்த ஆலோசனை மருத்துவர் எஞ்சலினா ஆங்.
ஒவ்வொரு மாதமும் அந்தப் பிரிவில் சிகிச்சை பெறும் 2,000 நோயாளிகள் பத்திலிருந்து 18 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றார் அவர்.
மன உளைச்சல் தொடர்புடைய வலிகள் கல்வி அழுத்தம், குடும்பத்தில் ஏற்படும் சச்சரவு, பகடிவதை, உடல் தோற்றம் குறித்த கவலைகள், அடையாளம் குறித்த கவலைகள் ஆகியவற்றால் ஏற்படக்கூடும் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.
“அத்தகைய அறிகுறிகள் உண்மையானவை. நமது மனமும் உடலும் எவ்வளவு இணக்கமாகப் பிணைப்பட்டுள்ளன என்பதை அது காட்டுகிறது. மனத்திற்காக உடல் பேசுகிறது,” என்றார் டாக்டர் ஆங்.
இருப்பினும், அத்தகைய அறிகுறிகளை அனுபவிப்போருக்கு அதுகுறித்து விழிப்புணர்வு இல்லை என்றார் அவர்.
“மன உளைச்சல் காரணமாக அத்தகைய வலிகள் ஏற்படுவதை அவர்கள் புரிந்துகொண்டுவிட்டால் உடனடியாக மனநல நிபுணர்களை நாடிச் செல்வர்,” என்று டாக்டர் ஆங் விளக்கம் அளித்தார்.
ஆனால், அதற்குப் பதிலாக அவர்கள் அடிப்படைப் பராமரிப்பு மருத்துவர்களையும் பலதுறை மருந்தகங்களையும் தேடிச் செல்கின்றனர்.
மன அழுத்தத்துடன் தொடர்புடைய உடல் ரீதியான அறிகுறிகளுடன் வரும் பதின்ம வயதினரும் பதின்ம வயதிற்கும் முந்தைய சிறுவர்களுக்கும், கே.கே. மகளிர், சிறார் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவு ஒவ்வொரு மாதமும் ஏறக்குறைய 118 இளையர் நலவாழ்வு மதிப்பீடுகளை நடத்துகிறது.
முக்கியத் தேர்வுகள் அல்லது குழந்தைகள் தொடக்கப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளிக்கு மாறும் காலக்கட்டங்கள் போன்ற பள்ளிப் பருவத்தின் உச்சக்கட்ட நேரங்களில் அந்த எண்ணிக்கை 190 வரை அதிகரிக்கக்கூடும் என்று டாக்டர் ஆங் கூறினார். அந்த மதிப்பீடுகள் 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டன. 12 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 601 சிங்கப்பூர்ப் பதின்ம வயதினரிடையே நடத்தப்பட்ட இணையவழி ஆய்வில் அவர்களில் 32.3 விழுக்காட்டினர் குறிப்பிடத்தக்க அளவிலான உடல் ரீதியான அறிகுறிகளை அனுபவித்திருப்பது தெரியவந்துள்ளது என்று கே.கே மருத்துவமனையின் உளவியல் மருத்துவத் துறையின் தலைவரும் முதுநிலை ஆலோசகருமான டாக்டர் விக்னேசன் மாரிமுத்து தெரிவித்தார்.
அந்த ஆய்வு 2024ஆம் ஆண்டில் நடத்தப்பட்டு, 2025ஆம் ஆண்டில் 'அனல்ஸ் ஆஃப் ஜெனரல் சைக்கியாட்ரி' இதழில் வெளியிடப்பட்டது.
