வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளில் அதிக நீக்குப்போக்கை நாடும் முதலாளிகள்

1 mins read
4161b279-8ed2-4130-bd26-2ee6fa65e2f6
வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏழு பரிந்துரைகளை சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் அளித்துள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வெளிநாட்டு ஊழியர் கொள்கைகளில் அதிகமான நீக்குப்போக்கைக் கடைப்பிடிக்குமாறு அரசாங்கத்திடம் முதலாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அவ்வாறு செய்வது, திட்டங்களை மறுசீரமைக்கும் நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கும் என்று சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பு தெரிவித்து உள்ளது.

அத்துடன், செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய திறன்களைப் பெற, கூடுதலாகக் கட்டமைக்கப்பட்ட பயிற்சி மற்றும் சான்றிதழ் வழிமுறைகள் வகுக்கப்படும் என்று அது கருதுகிறது.

சிங்கப்பூரின் 2026 வரவுசெலவுத் திட்டத்திற்கான ஏழு பரிந்துரைகளை அந்தக் கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்துள்ளது.

மனிதவளத்தை நிர்வகிப்பதிலும் செலவுகளால் ஏற்படும் அழுத்தங்களைக் குறைப்பதிலும் நிறுவனங்களுக்குத் தேவைப்படும் உதவியை நாடி அந்தப் பரிந்துரைகள் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், நிச்சயமற்ற உலகப் பொருளியல் நிலவரத்தில் ஊழியரணியையும் வர்த்தகங்களையும் வேகமாக உருமாற்றுவதன் நோக்கிலும் அந்தப் பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 16) வெளியிட்ட அறிக்கையில் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதிகமான மின்னிலக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பொருளியலைக் கடைப்பிடிக்க வர்த்தகங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டு பரிந்துரைகள் தயாரிக்கப்பட்டதாகக் கூட்டமைப்பின் தலைவர் டான் ஹீ டெக் தெரிவித்துள்ளார்.

அவற்றைத் தயாரிக்குமுன், கடந்த நவம்பர் மாதம் முதலாளிகளிடம் ஆய்வுகளையும் வாக்கெடுப்புகளையும் அந்தக் கூட்டமைப்பு நடத்தியது.

இவ்வாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி ஏறத்தாழ 4 விழுக்காடு வளர்ச்சி காணும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தனது முன்னுரைப்பை அதிகரித்திருக்கும் வேளையில், பல்வேறு துறைகளின் வர்த்தக நிலவரம் ஒரே சீராக இல்லை என்று கூட்டமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
முதலாளிவெளிநாட்டு ஊழியர்வரவுசெலவுத் திட்டம்