என்டர்பிரைஸ் எஸ்ஜி அமைப்பு, வளர்ச்சித் திறனுடைய நிறுவனங்களையும் சிறிய, நடுத்தர உள்ளூர் நிறுவனங்களையும் பேண அதன் முயற்சிகளைத் தீவிரப்படுத்தவுள்ளது.
சிங்கப்பூரில் இயங்கும் 300,000க்கும் அதிகமான வணிக நிறுவனங்களில் 99 விழுக்காட்டுக்கும் அதிகமானவை இத்தகைய நிறுவனங்களாக உள்ளன.
என்டர்பிரைஸ் எஸ்ஜி தலைவரான லீ சுவான் டெக், அந்தந்த நிறுவனங்களின் தேவைகளுக்கு உதவுவதற்கான அவசியத்தைக் கோட்டிட்டுக் காட்டினர். அதிக ஆற்றலுடைய நிறுவனங்கள், மானியங்களுக்கு அப்பாற்பட்டு தங்களுக்கென கூடுதல் நடவடிக்கைகளை எதிர்பார்ப்பதை அவர் சுட்டினார்.
2024ல் என்டர்பிரைஸ் எஸ்ஜி 11,500 வணிக நிறுவனங்களுக்கு உதவியதாக வியாழக்கிழமை (ஜனவரி 23) அது தெரிவித்தது. 2019ல் இருந்த 9,300 எனும் எண்ணிக்கையை இது விஞ்சினாலும், 2020க்கும் 2023க்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஆண்டுதோறும் அது உதவிய 18,200 நிறுவனங்களின் சராசரி எண்ணிக்கையை விட இது குறைவு.
என்டர்பிரைஸ் எஸ்ஜி உதவியவற்றில் 2,300 நிறுவனங்கள், உருமாற்றத் திட்டங்களைச் செயல்படுத்தின. 2019ல் செயல்படுத்தப்பட்ட திட்டங்களின் எண்ணிக்கையை விட இது 500வும் 2020க்கும் 2023க்கும் இடையே செயல்படுத்தப்பட்ட சராசரியை விட இது 1,500வும் குறைவு.
என்றாலும், அந்த உருமாற்ற முயற்சிகள் $14.5 பில்லியன் கூடுதல் வருவாயைச் சேர்த்ததுடன், 12,300 வேலைகளையும் உருவாக்கின. இவை, 2023ன் $16.4 பில்லியனை விடவும் 21,500 வேலைகளை விடவும் குறைவு.
உருமாற்றத் திட்டங்களை முன்னெடுக்க கூடுதலான நிறுவனங்கள் முன்வந்திருக்கலாம் என தாம் விரும்பியதாக திரு லீ சொன்னார். ஆனால், தொழில் செலவுகளும் உலகளாவிய விலை ஏற்ற, இறக்கமும் நிறுவனங்கள் உடனடி விவகாரங்களில் கவனத்தை திசைதிருப்ப வைத்தன.
புத்தாக்கத் திட்டங்களை நிறுவனங்கள் முன்னெடுக்க என்டர்பிரைஸ் எஸ்ஜி உதவியதில், ஆண்டு வருவாய் தலா $10.2 மில்லியன் கூடியது. 2023ல் பதிவான $5.2 மில்லியனை விட இது கிட்டத்தட்ட இருமடங்கு.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, ஆற்றலை வளர்க்கவும் விற்பனையை அதிகரிக்கவும் என்டர்பிரைஸ் எஸ்ஜி உதவிய 9,200 நிறுவனங்களில், நான்கில் மூன்றுக்கும் அதிகமானவை தங்கள் செயல்பாடுகளில் கூடுதல் மின்னிலக்க அம்சங்களைக் கடைப்பிடித்தன.
2025ல், உள்ளூர் நிறுவனங்களை அனைத்துலகமயமாக்குவதிலும் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் பெரிய நிறுவனங்களுக்கு இடையே ஒத்துழைப்பிலும் வளர்ந்துவரும் துறைகளுக்கு ஆதரவளிப்பதிலும் என்டர்பிரைஸ் எஸ்ஜி கவனம் செலுத்தும்.

