ஜூரோங் பாயிண்ட், அங் மோ கியோ நடுவத்தில் மின்சார வாகன மின்னூட்டத்திற்குத் தள்ளுபடி

ஜூரோங் பாயிண்ட், அங் மோ கியோ நடுவத்தில் மின்சார வாகன மின்னூட்டத்திற்குத் தள்ளுபடி

படம்: ஜூரோங் பாயிண்ட்

27 Nov 2026 - 4:45 pm

1 mins read

ஜூரோங் வெஸ்ட்டில் உள்ள ஜூரோங் பாயிண்ட் கடைத்தொகுதி, வியாழக்கிழமை (நவம்பர் 26) மேலும் 56 மின்சார வாகன மின்னூட்ட முனைகளை அமைத்துள்ளது.

அக்கடைத்தொகுதியின் ‘ஜேபி1’, ‘ஜேபி2’ பகுதிகளில் ‘எஸ்பி மொபிலிட்டி’ நிறுவனத்தால் இயக்கப்படும் அவை, 22 கிலோவாட் மாறுதிசை மின்னோட்ட (ஏசி) மின்னூட்டிகளாகும்.

அவை, வோல்ட் சிங்கப்பூர் நிறுவனத்தால் ஏற்கெனவே இயக்கப்பட்டுவரும் நான்கு மின்னூட்ட முனைகளுடன் இணைவதால், அங்குள்ள மொத்த மின்னூட்ட முனைகளின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

வரும் டிசம்பர் 27ஆம் தேதிவரை அக்கடைத்தொகுதியில் உள்ள எஸ்பி மொபிலிட்டி மையங்களில் மின்னூட்டம் செய்வதற்கு வழக்கமான கட்டணத்திலிருந்து 10% தள்ளுபடியுடன், ஒரு கிலோவாட்-மணி நேரத்திற்கு 72.6 காசுகள் வசூலிக்கப்படும்.

அங் மோ கியோ ரயில் நிலையத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் அங் மோ கியோ நடுவத்தில் உள்ள எஸ்பி மொபிலிட்டி மின்னூட்ட முனைகளுக்கும் அதே தள்ளுபடி பொருந்தும்.

ஜூரோங் பாயிண்ட் போலவே, அந்தக் கடைத்தொகுதியும் ‘லிங்க் ரியல் எஸ்டேட் இன்வெஸ்ட்மென்ட் டிரஸ்ட்’ நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாண்டின் இறுதிக்குள், அங் மோ கியோ நடுவம் தனது மூன்றாவது கீழ்த்தளத்தின் வாகன நிறுத்துமிடத்தில் உள்ள மின்னூட்ட முனைகளை இரண்டிலிருந்து 14ஆக விரிவுபடுத்தவுள்ளது.

அவற்றில் மாறுதிசை மின்னோட்ட மின்னூட்டிகளும் அதிவேக நேர்திசை மின்னோட்ட மின்னூட்டிகளும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்