புருணை தலைவர்களுடன் ஃபைஷால் சந்திப்பு

1 mins read
b654ab28-3393-4ce7-a4c9-9522e5dc47b7
புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவை டாக்டர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் சந்தித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம், இரு நாள் அதிகாரத்துவப் பயணமாக புருணை சென்று வந்துள்ளார்.

திங்கட்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் புருணை சென்ற அவர், அங்கு புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவையும் அவரின் மகனான பட்டத்து இளவரசர் அல் முஹ்ததீ பில்லாவையும் சந்தித்தார்.

உள்துறை மூத்த துணை அமைச்சருமான டாக்டர் ஃபைஷால் இதுகுறித்துப் புதன்கிழமை (நவம்பர் 26) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், “பல்லாண்டு காலமாக வலுவாக இருந்து வந்துள்ள சிங்கப்பூர்-புருணை உறவுகளை நாங்கள் மறுவுறுதி செய்துகொள்ள இது ஓர் அர்த்தமுள்ள வாய்ப்பாக இருந்தது,” என்றார்.

புருணை முஃப்தி டாக்டர் ஹாஜி அவாங் அப்துல் அஸிஸையும் சந்தித்த டாக்டர் ஃபைஷால், ஃபத்வா உருவாக்கம் குறித்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டார். அத்துடன், சமய வழிகாட்டுதல், சமூக ஈடுபாடு குறித்த அணுகுமுறைகளை ஒன்று மற்றொன்றிடமிருந்து இரு நாடுகளும் எவ்வாறு கற்றுக்கொள்ளலாம் என்பது பற்றியும் அவர்கள் ஆராய்ந்தனர்.

இந்தச் சந்திப்பில் சிங்கப்பூர் துணை முஃப்தி முகம்மது முராத் முகம்மது அரிசும் பங்கேற்றார்.

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சர் என்ற முறையில் புருணைக்கு முதன்முறையாகச் சென்ற டாக்டர் ஃபைஷால், “சிங்கப்பூரும் புருணையும் சேர்ந்து வளர்ந்து செழித்தோங்குவதற்கான புதிய வழிமுறைகளை ஆராய நான் ஆவலுடன் உள்ளேன்,” என்றார்.

குறிப்புச் சொற்கள்