தேசிய பூங்காக் கழக மேம்பாட்டுத் திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை போலியாக தயாரித்த குற்றத்துக்காக இரண்டு ஆடவர்கள் மீது நீதிமன்றத்தில் புதன்கிழமை (நவம்பர் 26) குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
திட்டங்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
ஃபெலிக்ஸ் சியாவ் கா கீ என்ற 39 வயது ஆடவர், கழகம் பணியமர்த்திய குத்தகையாளரின் நிலஅளவீடு செய்யும் பணியாளர். போலியாக ஐந்து ஏலக் குத்தகை விலைகேட்பு அறிக்கைகளை வேறு ஐந்து குத்தகையாளர் பெயர்களில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் வரையில் தயாரித்த குற்றத்தை அவர் எதிர்நோக்குகிறார்.
அவர்மீது ஐந்து மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
புவா சுங் கியோங் என்பவர், 53 வயது மின்னியல் சேவை குத்தகை நிறுவனத்தின் இயக்குநர். அவர் 22 போலி ஏலக்குத்தகை அறிக்கைகளை சமர்ப்பித்துள்ளார். இருவேறு குத்தகையாளர்கள் பெயரில் அவரது அலுவலக ஊழியர்களைக் கொண்டு 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், 2021ஆம் ஆண்டு மே மாதம் வரையில் அவர் தயாரிக்க வைத்துள்ளார். அவர்மீது இரண்டு மோசடிக் குற்றச்சாட்டுகள் உள்ளன.
நீதிமன்றத்தில் இருவரும் குற்றங்களை ஒப்புக்கொள்ளப்போவதை உறுதிசெய்யவில்லை. குற்றவியல் சட்ட உதவித் திட்டத்துக்கு அவர்கள் விண்ணப்பிக்க வழக்கு தள்ளிவைக்கப்பட்டு, விசாரணை 2026ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி மீண்டும் தொடங்கும்.
ஆடவர்கள் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுடனும் தற்போது எவ்வித ஒப்பந்தங்களும் இல்லை என்று தேசிய பூங்காக் கழகம் உறுதிசெய்தது.
குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் நான்கு ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டு தண்டனைகளும் ஒருசேர விதிக்கப்படலாம்.

