$1.37 மில்லியன் நிதி திரட்டிய குடும்ப விளையாட்டு தினம்

$1.37 மில்லியன் நிதி திரட்டிய குடும்ப விளையாட்டு தினம்

படம்: மீனா அண்ணாமலை

29 Nov 2026 - 12:50 pm

2 mins read

மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியும் மவுன்ட்பேட்டன் தனித்தொகுதியும் இணைந்து முதன்முறையாக ஏற்பாடு செய்த ‘பல்ஸ் 2026’ குடும்ப நன்கொடை விளையாட்டு தினத்தில் $1.37 மில்லியன் நிதி திரட்டப்பட்டுள்ளது.

‘ஒரே சமூகம், ஒரே இதயத்துடிப்பு’ என்ற கருப்பொருளுடன் தேசிய விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 29) நடந்தேறிய நிகழ்ச்சியில் 2,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் துடிப்புடன் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பிரதமர் லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அவருடன் ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், நாடாளுமன்ற நாயகர் சியா கியென் பெங், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டின் பெய் லிங், டயானா பாங், கோ ஸு கீ ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

“இவ்வாண்டு நமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட பல உலகளாவிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. மத்திய கிழக்கு நெருக்கடி, புகைமூட்டப் பிரச்சினை எனப் பல சவால்களை நாம் கடந்து வந்துள்ளோம்.

“நிச்சயமற்ற, பிரச்சினைகள் நிறைந்த இந்த உலகில், நாம் எப்போதும் ஒருவரையொருவர் நம்பியிருக்கக்கூடிய இடமாகச் சிங்கப்பூரைத் தொடர்ந்து உருவாக்குவோம்,” என்று பிரதமர் அறைகூவல் விடுத்தார்.

நிகழ்ச்சியில் திரட்டப்பட்ட தொகை உதவி தேவைப்படும் குடியிருப்பாளர்களுக்கும் குடும்பங்களுக்கும் வழங்கப்படுவதோடு சமூக நற்பணிகளுக்கும் செலவிடப்படுமென்று தெரிவிக்கப்பட்டது.

மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியிலும் மவுண்ட்பேட்டன் தனித்தொகுதியிலும் வழங்கப்படும் ஆறு சமூக மேம்பாடு, நல்வாழ்வு நிதிகளுக்கும் அந்த நன்கொடை உதவும்.

தி ஹட் லிமிடெட், பிபிஐஎஸ் குடும்ப சேவைகள், சிங்கப்பூர் திடல்தடச் சங்கம் ஆகிய அமைப்புகளின் முயற்சிகளுக்கும் நன்கொடை ஆதரவளிக்கும்.

உதவி தேவைப்படும் அண்டைவீட்டாருக்கு உதவுவதுடன் குடியிருப்பாளர்களிடையே ஆரோக்கியமான வாழ்க்கைமுறையையும் சமூக பங்கேற்பையும் ஆதரிக்க அந்நிகழ்ச்சி குடும்ப விளையாட்டு தினமாக வடிவமைக்கப்பட்டது.

“இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஒவ்வொரு படியும் திரட்டப்பட்ட ஒவ்வொரு வெள்ளியும் சமூகத்தில் உதவி தேவைப்படுவோருக்கு நிச்சயம் உதவும். இந்த நிகழ்ச்சியைக் கடந்தும் அனைவரும் தொடர்ந்து ஒருவருடன் ஒருவர் தோள் நிற்பர் என்று நம்புகிறேன்,” என்றார் திரு சியா.

மவுண்ட்பேட்டன் குடியிருப்பாளரும் சமூக மேம்பாடு, நல்வாழ்வு நிதியின் பெறுநருமான கென்னி ரவிச்சந்திரன், தமக்கு உதவிய சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்க இந்நிகழ்ச்சி வாய்ப்பளித்ததாக உணர்கிறார்.

“எனக்கு இதயத்தில் நான்கு அடைப்புகள், உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு என பல உடல்நலப் பிரச்சினைகள் இருப்பதால் என்னால் வேலைக்குச் செல்ல முடிவதில்லை. எனக்கு வழங்கப்படும் உதவிநிதிகள் என் மூன்று பிள்ளைகளின் கல்வி, போக்குவரத்து, உணவு ஆகிய பல்வேறு செலவுகளைச் சமாளிக்க பெரிதும் உதவுகின்றன.

“இத்தகைய நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது உதவி பெறுபவராக மட்டுமல்லாமல் உதவி செய்பவராகவும் மாற வாய்ப்பு கிடைக்கிறது. என்னால் முடிந்த உதவியைச் சமூகத்துக்குத் தொடர்ந்து செய்வேன்,” என்றார் அவர்.

மௌண்ட்பாட்டன் குடியிருப்பாளரும் சமூக மேம்பாடு, நல்வாழ்வு நிதியின் பெறுநருமான கென்னி ரவிச்சந்திரன், பிறருக்கு உதவ இந்நிகழ்ச்சி தமக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி கொண்டார்.
மௌண்ட்பாட்டன் குடியிருப்பாளரும் சமூக மேம்பாடு, நல்வாழ்வு நிதியின் பெறுநருமான கென்னி ரவிச்சந்திரன், பிறருக்கு உதவ இந்நிகழ்ச்சி தமக்கு வாய்ப்பளித்ததில் மகிழ்ச்சி கொண்டார். - படம்: மீனா அண்ணாமலை

நிகழ்ச்சியில் குடும்ப உடற்பயிற்சி சவால், 10 கிலோமீட்டர் சவால் ஓட்டம், 3.2 கிலோமீட்டர் நட்புமுறை நடை, ஓட்டம் என பல்வேறு அங்கங்கள் பங்கேற்பாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்களுக்காகப் பல்வேறு உடற்பயிற்சி அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் குடியிருப்பாளர்களுக்காகப் பல்வேறு உடற்பயிற்சி அங்கங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. - படம்: மீனா அண்ணாமலை

அதோடு, சிங்கப்பூர் திடல்தடச் சங்கத்திற்கும் தி ஹட் லிமிடெட் அமைப்பிற்கும் $120,000 நன்கொடைக் காசோலைகளும் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்