பிஞ்சுக் கழல்கள் தவழ்ந்தாடி மகிழ்ந்த ‘சர்வார்ப்பணம்’

2 mins read
3b533f40-1782-408c-a636-e3257fef711c
கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கில் 500 நடனமணிகள் மேடையேற வாய்ப்பளித்தது ‘சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி. - படம்: சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்

எந்த வயதிலும், எத்திறன் கொண்டிருப்பினும் வண்ணமய ஆடைகளுடன் மேடையேறலாம்; கரவொலி பெற்று ஊக்கம் பெறலாம்.

இந்த நோக்குடன் ‘சர்வார்ப்பணம்’ என்ற நடன நிகழ்ச்சியை நடத்தியுள்ளது ‘சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி..

கிரேத்தா ஆயர் மக்கள் அரங்கில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 21) நடைபெற்ற இந்நிகழ்ச்சியைக் காண ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரண்டனர்.

ஆறு மாத தயாரிப்புப் பணிகளுக்குப் பிறகு இந்த நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 500 மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களில் சிலர் மூன்று வயதுக் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ‘சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்’ கலைப்பள்ளி, சிங்கப்பூரில் ஒன்பது இடங்களில் வகுப்பு நடத்துகிறது. 850க்கும் அதிகமான மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் பரதநாட்டியம், குச்சுப்புடி, கதக் ஆகிய கலைகளுடன் வாய்ப்பாட்டும் இசைக்கருவிகளும் கற்பிக்கப்படுகின்றன.

எல்லோருக்கும் மேடையேறும் வாய்ப்பை சர்வார்ப்பணம் 2024 வழங்குவதாக ‘சர்வா ஃபைன் ஆர்ட்ஸ்’ நிறுவனர் ஷைலு வின்ஸ்டன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.

“இசை அல்லது நடனம் கற்பவர்கள் நிபுணத்துவம் பெறுவதற்கு எட்டு முதல் பத்து ஆண்டுகள் ஆகலாம். அந்த நிலையை அடைந்த பின்னர் அவர்களுக்குப் பல மேடைகள் கிடைக்கும். ஆனால், அதுவரையிலும் அத்தகைய மாணவர்களுக்கு ஊக்கம் தருவதற்கு மேடைகள் தேவைப்படுகின்றன. அத்தகைய மேடையை வழங்குவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம்,” என்றார் திருவாட்டி ஷைலு.

ஆசிரியர்களின் ஆதரவால் நடனம் ஆட முடிந்ததாகக் கூறிய சகாயா இமானுவெல் பிரபு மார்லின், 15, இதனால் நடனத்தை ஒரு மாதத்தில் கற்றுக்கொள்ள முடிந்ததாகக் கூறினார். “குறிப்பாக, முகபாவங்களை எப்படி வெளிப்படுத்துவது என்பதை இதன் மூலம் இன்னும் கற்றுக்கொண்டேன்,” என்று அவர் சொன்னார்.

எல்லோரும் ஒன்றுசேர்ந்து பலமுறை ஒத்திகை சபார்க்க இயலாத சூழலில் தனியே நன்கு ஒத்திகை பார்த்து மற்ற நடனமணிகளுடன் இணைந்தது கடினமாக இருந்தபோதும் நீக்குப்போக்குடன் அதனை அணுகி, மகிழ்வோடு நடனம் ஆடியதாகக் கூறினார், இன்னோர் இளம் நடனமணியான நீலமேகம் ஸ்ரீதரன் கோகிலா தீக்‌ஷா.

குறிப்புச் சொற்கள்