பலதுறைத் தொழிற்கல்லூரிப் படிப்பை முடித்துப் பட்டயம் பெற்றவர்களில் முழுநேர நிரந்தர வேலை பெற்றவர்களின் எண்ணிக்கை 2024ஆம் ஆண்டில் குறைந்திருந்தது.
இருப்பினும், அவர்கள் பெற்ற சம்பளம் அதிகரித்ததாக ஜனவரி 13ஆம் தேதி வெளியிடப்பட்ட பட்டதாரி வேலைவாய்ப்பு ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.
சிங்கப்பூரின் ஐந்து பலதுறைத் தொழிற்கல்லூரிகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, படிப்பை முடித்தவர்களில் 54.6 விழுக்காட்டினர் 2024ல் முழுநேர நிரந்தர வேலைகளில் இருந்தனர். 2023ஆம் ஆண்டு 60 விழுக்காடாகவும் 2022ல் 59 விழுக்காடாகவும் புள்ளிவிவரம் இருந்தது.
ஆய்வில் மொத்தம் 7,614 பேர் பங்கேற்றனர். படிப்பை முடித்து சுமார் ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2024ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதியன்று அவர்களின் வேலை நியமன நிலை என்ன என்பதை ஆய்வு கண்டறிய முற்பட்டது.
முழுநேர நிரந்தர வேலைகளில் இருந்த பட்டதாரிகளிடையே இடைநிலை மொத்த மாதாந்தர சம்பளம் $100 வளர்ச்சி கண்டிருந்தது. இதன்படி, 2023ல் பதிவான $2,800, 2024ஆம் ஆண்டில் $2,900 என உயர்ந்திருந்தது.
முந்தைய ஆண்டுகளில் காணப்பட்ட போக்கைப் போல், சுகாதார அறிவியல், மானுடவியல் மற்றும் சமூக அறிவியல், தகவல் மற்றும் மின்னிலக்கத் தொழில்நுட்பங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த பட்டதாரிகள், மற்ற துறைகளில் உள்ள தங்கள் சகாக்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம் பெற்றனர்.
ஒட்டுமொத்தத்தில், 2024ஆம் ஆண்டில் பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளில் 87.5 விழுக்காட்டினர் தங்கள் படிப்பை முடித்தபின் அல்லது முழுநேர தேசிய சேவையை முடித்து ஆறு மாதங்களுக்குள் ஊழியரணியில் நிரந்தர, தன்னுரிமை, அல்லது பகுதிநேர வேலைகளைத் தேடிக்கொண்டனர்.
இருப்பினும், 2023ஆம் ஆண்டில் இது 92.7 விழுக்காடாகவும் 2022ஆம் ஆண்டில் 91.8 விழுக்காடாகவும் இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 கொள்ளைநோயிலிருந்து சிங்கப்பூர் பொருளாதாரம் படிப்படியாக மீண்டுவந்த இந்தக் காலகட்டத்தில் வேலைவாய்ப்புகளும் மேம்பட்டன.

