தெம்பனிசில் உள்ள ஒரு வீவக வீட்டில் தீ மூண்டதைத் தொடர்ந்து அக்கம்பக்க வீடுகளில் வசிக்கும் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
திங்கட்கிழமை (டிசம்பர் 9) காலை இந்த விபத்து நேர்ந்தது.
தெம்பனிஸ் ஸ்திரீட் 81, புளோக் 889ஏயில் உள்ள 13வது மாடியில் தீ மூண்டது குறித்து காலை 6.40 மணிக்குத் தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது ஒரு வீட்டிலிருந்து கரும்புகை வெளியேறியது என்று டிசம்பர் 9ஆம் தேதி குடிமைத் தற்காப்புப் படை ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டது.
அதிகாரிகள் வருவதற்கு முன்பே இரண்டு வீடுகளில் இருந்தவர்கள் வெளியேறிவிட்டனர். அவர்களிடம் புகையை சுவாசித்ததால் பாதிப்பு ஏதாவது ஏற்பட்டதா என்று மருத்துவ உதவியாளர்கள் சோதனையிட்டனர். அதே சமயத்தில் மருத்துவமனைக்குச் செல்லவும் அவர்கள் மறுத்துவிட்டனர். படுக்கை அறையில் தீ மூண்டதாகத் தெரிகிறது. தீ விபத்திற்கான காரணம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை விசாரித்து வருகிறது.

