மின்சிகரெட்டால் நீண்டநாள் அனுமதி தகுதியிழந்த முதல் வெளிநாட்டவர்

1 mins read
d443b5bb-d0d7-41be-875e-e24cf8d002f9
நீண்டநாள் அனுமதி அட்டைத் தகுதியை மின்சிகரெட் குற்றத்துக்காக இழந்துள்ள முதல் வெளிநாட்டவர் இந்த பதின்ம வயது பெண் ஆவார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மியன்மாரைச் சேர்ந்த ஒரு 15 வயதான பதின்ம வயதுப் பெண் எட்டோமிடெட் போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் வைத்திருந்த குற்றத்துக்கு கைதாகியுள்ளார்.

அதனால் அவரது நீண்டநாள் அனுமதி அட்டைத் தகுதி ரத்து செய்யப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சு வெள்ளிக்கிழமை (டிசம்பர் 12) அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆயுதங்கள் வைத்திருந்தது, வன்முறையில் ஈடுபட்டது ஆகிய குற்றங்களுக்காகவும் அவர் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் சார்ந்த குற்றத்துக்கு சிங்கப்பூரில் தங்கியிருக்கக்கூடிய நீண்டநாள் அனுமதி அட்டையை வைத்திருக்கும் தகுதியை இழந்துள்ள முதல் வெளிநாட்டவர் இவர் என்பது கவனத்துக்குரியது.

காவல்துறை விசாரணைகள் முடிவடைந்ததும், அவர் நாடுகடத்தப்படுவார். சிங்கப்பூருக்கு அவர் மீண்டும் வருவதற்கு தடையும் விதிக்கப்படும். இதனை உள்துறை அமைச்சு உறுதிப்படுத்தியது. விசாரணையில் உதவுவதற்காக அவர் தொடர்ந்து சிங்கப்பூரில் இருக்க சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் 8ஆம் தேதி, உள்துறை அமைச்சும் சுகாதார அறிவியல் ஆணையமும் கூட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தன. அதில் காவல்துறை நவம்பர் 14 அன்று நடத்திய சோதனையின்போது போதைப்பொருள் கலந்த மின்சிகரெட்டுடன் பதின்ம வயது வெளிநாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

மின்சிகரெட், கேபாட் போன்றவற்றுக்கு எதிராக செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தண்டனைகள் அரசாங்கத்தால் கடுமையாக்கப்பட்டன. அதன்படி அக்குற்றங்களுக்குப் பிடிபடும் வெளிநாட்டினரின் குடிநுழைவுத் தகுதிகள் ரத்துசெய்யப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது.

குறிப்புச் சொற்கள்