முதல் தெங்கா தனியார் வீடமைப்பு: ஏலக்குத்தகையில் ஹோங் லியோங் குழு முன்னிலை

2 mins read
933cd446-4d96-493f-a001-f5a284688963
டெய்ரி ஃபார்ம் வாக், பெட்டிர் ரோடு சந்திப்பில் நிலப்பகுதி உள்ளது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

அரசாங்கம், குடியிருப்பு வீடுகள் கட்டுவதற்கான இரண்டு நிலப் பகுதிகளை ஏலக் குத்தகைக்கு வெளியிட்டது. இதற்கு மிதமான வரவேற்பு கிடைத்துள்ளது.

வரவுள்ள புதிய தெங்கா குடியிருப்பு வட்டாரத்தில் முதல் தனியார் வீடுகளுக்கான நிலம் வெளியிடப்பட்டது. இதனை ஹோங் லியோங் தலைமையிலான குழு $675 மில்லியனுக்கு வாங்க விருப்பம் தெரிவித்தது. இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களைவிட அதிக தொகை கொடுத்து வாங்க முன்வந்தது. இதன்படி ஒரு சதுர அடி நிலப்பரப்பின் விலை $821 ஆகும்.

இதற்கிடையே 540 வீடுகள் கட்டக்கூடிய ‘டெய்ரி ஃபார்ம் வாக்’ நிலப்பகுதிக்கு இரண்டு நிறுவனங்கள் போட்டியிட்டன. இதில் ‘சன்டார்லி கன்ஸ்ட்ரக்‌ஷன்’ தலைமையிலான கட்டுமானக் கூட்டு நிறுவனம் $504.5 மில்லியனுக்கு வாங்க முன்வந்தது. இதன்படி ஒரு சதுர அடியின் விலை $1,020 ஆகும்.

தெங்கா கார்டன் அவென்யூ நிலப்பகுதியை வாங்க ஹோங் லியோங் தவிர மேலும் இரண்டு நிறுவனங்கள் போட்டியிட்டன.

கிங்ஸ்பர்ட் நிறுவனம் 670.1 மில்லியன் வெள்ளியுடன் இரண்டாவது இடத்திலும் சிம் லியான் குழுமம் 668 மில்லியன் வெள்ளியுடன் 3வது இடத்திலும் வந்தன. இதையடுத்து ஹோங் லியோங் முன்னிலை பெற்றது.

மத்திய வட்டாரத்துக்கு வெளியே அமைந்துள்ள பகுதிக்கு சதுர அடி 800 முதல் 980 வரை ஏலக்குத்தகையில் எடுக்கப்படும் என்று சொத்து நிபுணர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கும் குறைவாகவே நிறுவனங்கள் விலையைக் குறிப்பிட்டுள்ளன.

கடந்த பிப்ரவரியில் விற்பனைக்கு வெளியிடப்பட்ட பிளாண்டேஷன் குளோஸ் நிலப்பகுதியை வாங்க நான்கு நிறுவனங்கள் போட்டியிட்டன. அந்த நிலப் பகுதி, ஹோய் ஹப் ரியால்டி-சன்வே டெவலப்மெண்ட் கூட்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. 423 மில்லியன் வெள்ளிக்கு அந்த நிலப்பகுதியை அந்நிறுவனம் வாங்கியது.

குறிப்புச் சொற்கள்