செங்காங் வெஸ்ட், புவாங்கோக், அப்பர் சிராங்கூன், கம்பஸ்வேல், பொங்கோல் சென்ட்ரல் ஆகிய வட்டாரங்களுக்கும் நகரமையத்துக்கும் இடையே புதிதாக ஐந்து பேருந்துச் சேவைகள் டிசம்பர் மாதம் 15ஆம் தேதியிலிருந்து தொடங்கிவைக்கப்படுகின்றன.
இந்தப் பேருந்துச் சேவைகள் குடியிருப்புப் பேட்டைகளுக்கும் நகரமையத்துக்கும் இடையே விரைவுச்சேவையை வழங்கும்.
பேருந்து இணைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இப்புதிய பேருந்துச் சேவைகள் வழங்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் திங்கட்கிழமையன்று (நவம்பர் 24) ஃபேஸ்புக்கில் பதிவிட்டது.
2024ஆம் ஆண்டு முதல், அடுத்த எட்டு ஆண்டுகளுக்குப் புதிய குடியிருப்புப் பேட்டைகளுக்குப் பேருந்துக் கட்டமைப்பை விரிவுபடுத்த இந்த $900 மில்லியன் திட்டம் இலக்கு கொண்டுள்ளது.
செங்காங் வெஸ்ட்டிலிருந்து மத்திய விரைவுச்சாலை வழியாக டௌன்டவுன் வட்டாரம், சன்டெக் சிட்டி ஆகிய இடங்களுக்கு பேருந்து எண் 679 சேவை வழங்கும்.
இப்பேருந்து செங்காங் வெஸ்ட் வே, ஃபேர்ன்வேல் ஸ்திரீட், ஜாலான் காயு, இயோ சூ காங், பேஃபிரண்ட் அவென்யூ ஆகிய இடங்கள் வழியாகச் செல்லும்.
புவாங்கோக்கிலிருந்து மத்திய விரைவுச்சாலை வழியாக ஆர்ச்சர்ட், டோபி காட் ஆகிய இடங்களுக்குப் பேருந்து எண் 680 செல்லும். இப்பேருந்து புவாங்கோக் கிரசெண்ட், ஹவ்காங் அவென்யூ 9, அங் மோ கியோ 3, ஆர்ச்சர்ட் சாலை வழி செல்லும்.
பேருந்து எண் 681, காலாங்-பாய லேபார் விரைவுச்சாலை வழியாக அப்பர் சிராங்கூனிலிருந்து ஆர்ச்சர்ட் மற்றும் நொவீனாவுக்குச் செல்லும்.
தொடர்புடைய செய்திகள்
இப்பேருந்து அப்பர் சிராங்கூன் சாலை, ஹவ்காங் சென்ட்ரல், தெம்பனிஸ் சாலை, ஆர்ச்சர்ட் சாலை, ஸ்காட்ஸ் சாலை, மோல்மீன் சாலை ஆகிய இடங்கள் வழியாகச் செல்லும்.
பேருந்து எண் 682, மத்திய விரைவுச்சாலை வழியாகக் கம்பஸ்வேல் வட்டாரத்துக்கும் டோபி காட்டுக்கும் இடையே சேவை வழங்கும்.
இப்பேருந்து கம்பஸ்வேல் டிரைவ், எங்கர்வேல் டிரைவ், செங்காங் ஈஸ்ட் வே, செங்காங் வெஸ்ட் வே, மோல்மீன் சாலை, ஆர்ச்சர்ட் சாலை வழியாகச் செல்லும்.

