ஜனவரி 1ஆம் தேதி முதல் உணவைக் கையாளுபவர்கள் முகக்கவசம் அல்லது எச்சில் தடுப்புக் கவசங்களை அணிய வேண்டிய அவசியமில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு வியாழக்கிழமை (டிசம்பர் 4) அன்று தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2020 முதல், கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தில், வாய் அல்லது மூக்கிலிருந்து வெளியேற்றப்படும் எந்தவொரு பொருளும் உணவை மாசுபடுத்துவதைத் தடுக்க, ஒரு நடவடிக்கை தேவைப்பட்டதால் அது அமல்படுத்தப்பட்டது.
இந்த விதி, அனைத்து உணவு நிறுவனங்களிலும் உணவு, பான விற்பனை மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் பொருந்தும்.
ஆனால், டிசம்பர் 4ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில், உணவு மாசுபாடு என்பது போதிய சுகாதாரமின்மை, உணவை மோசமாகக் கையாளுதல், வெப்பநிலை மேலாண்மை, சமைக்காத மற்றும் சாப்பிடத் தயாராக உள்ள உணவுகளுக்கிடையிலான தொடர்பு காரணமாக இருக்கலாம் என்று உணவு அமைப்பு கூறியது.
உணவைக் கையாளுபவர்கள் அத்தகைய உபகரணங்களை அணியாதபோது உணவுப் பாதுகாப்பிற்கு குறைந்த ஆபத்து இருப்பதாக மதிப்பிட்டுள்ளதாக அமைப்பு மேலும் சொன்னது.
இருப்பினும், உணவு நிறுவனங்கள் நல்ல உணவு பாதுகாப்பு நடைமுறைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று உணவு அமைப்பு கூறியது. இதில் சரியாக உணவைக் கையாளுதல், நேரம் மற்றும் வெப்பநிலை கட்டுப்பாடு, முழுமையாகச் சுத்தம் செய்தல், உணவைத் தயாரிக்கும் இடத்தைத் தூய்மையாக வைத்திருத்தல் ஆகியவை அடங்கும்.
உணவைக் கையாளுபவர்கள் முகக்கவசங்கள் அல்லது எச்சில் தடுப்புக் கவசங்களை முறையாக அணிய ஊக்குவிக்கப்படுவது ஒரு நல்ல நடைமுறை என்று உணவு அமைப்பு தெரிவித்தது. இந்தப் பொருள்கள் முறையாகக் கையாளப்படுவதையும் சுத்தமாக வைத்திருப்பதையும் அவர்கள் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில், அவை முறையற்ற முறையில் கையாளப்பட்டால் உணவு மாசுபாட்டுக்குக் காரணங்களாக அமைந்து விடும்.
உணவுப் பாதுகாப்பு அபாயங்களை நிவர்த்தி செய்வதில் இது பொருத்தமானதாக இருப்பதை உறுதி செய்வதற்காக, அதன் உணவுப் பாதுகாப்பு ஒழுங்குமுறை கட்டமைப்பை தொடர்ந்து மதிப்பாய்வு செய்வதன் ஒரு பகுதியாக, இந்தத் தேவை அகற்றப்பட்டுள்ளது என்றும் உணவு அமைப்பு கூறியது.

