எதிரணி ஆட்டக்காரரைத் தாக்கியதற்காக தஞ்சோங் பகார் யுனைடெட் அணியின் முன்னாள் ஆட்டக்காரர் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 25) குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.
ரிஸ்கின் அனிக் ரஹாய்ஸாட் எனப்படும் அந்த 20 வயது ஆட்டக்காரரை நன்னடத்தைக் கண்காணிப்பில் வைப்பதற்கான தகுதி அறிக்கையை நீதிபதி கோரியுள்ளார். வேண்டுமென்றே காயம் ஏற்படுத்திய ஒரு குற்றச்சாட்டுக்காக அவர் தண்டிக்கப்பட்டுள்ளார்.
கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி இரவு சிங்கப்பூர் பிரிமியர் லீக்கின் 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான காற்பந்துப் போட்டி ஜூரோங் ஈஸ்ட் விளையாட்டரங்கில் நடைபெற்றது.
தஞ்சோங் பகார் யுனைடெட் அணியும் அல்பிரெக்ஸ் நிகாட்டா அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே இரு அணிகளுக்கும் இடையே பதற்றம் நிலவியது.
ஒரு கட்டத்தில் தமது அணியில் உள்ள ஒருவரை அல்பிரெக்ஸ் அணியின் 17 வயது ஆட்டக்காரர் கேலி செய்ததாக ரிஸ்கின் கேள்விப்பட்டார். ஆட்டம் முடிந்து இரு அணியினரும் கைகுலுக்கும் வேளையில் எதிரணியின் இரண்டு வீரர்களை அவர் தாக்கினார்.
அதன் விளைவாக ஒருவர் மயங்கி விழுந்தார். இரவு 9.45 மணிவாக்கில் ஏறத்தாழ 200 ரசிகர்கள் முன்னிலையில் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தஞ்சோங் பகார் யுனைடெட் அணியிலிருந்து ரிஸ்கின் நீக்கப்பட்டார். அவரது ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டது.
சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம் ரிஸ்கினுக்கு 30 மாதத் தடை விதித்தது. அத்துடன் அவருக்கு $2,000 அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கடந்த மார்ச் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

