சிங்கப்பூரில் கடந்த அக்டோபர் மாதம் எஃப்1 கார்ப் பந்தயம் நடைபெற்றது. அப்போது வெளிநாட்டு மாணவர் ஒருவர் நுழைவுச்சீட்டு இல்லாமல் திருட்டுத்தனமாகப் பந்தய வளாகத்திற்குள் நுழைந்தார்.
திங்கட்கிழமை (டிசம்பர் 1) அவருக்கு நான்கு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சுவீடனைச் சேர்ந்த 23 வயது அல்கலாஸ் கரம் அக்டோபர் 4ஆம் தேதி நுழைவுச்சீட்டு இல்லாமல் பந்தயம் பார்க்கச் சென்றார்.
இரவு 7 மணிவாக்கில் ‘சர்கிட் பார்க் ஏரியா வாயில் 1’ல் நுழைவுச்சீட்டுகளைச் சரிபார்த்துக்கொண்டிருந்த 17 வயது தொண்டூழியரிடம் தனது நண்பர் நுழைவுச் சீட்டுடன் பந்தயம் பார்க்கச் சென்றுவிட்டதாகக் கூறினார்.
30 நிமிடங்கள் ஆனபிறகும் அல்கலாஸ் அங்கேயே நின்றுள்ளார். அவர்மீது பரிதாபப்பட்ட தொண்டூழியர் ஆடவரை கார் பந்தயம் பார்க்க அனுமதித்துள்ளார். அதன்பின் அல்கலாஸ் விலை உயர்ந்த நுழைவுச்சீட்டு வாங்கியோருக்கான பகுதிக்குள் நுழைந்தார்.
பின்னர் பந்தயத் தடத்திற்கு அருகில் உள்ள பகுதிக்குச் சென்றார். அங்கு கார் ஓட்டுநர்கள், கார் குழுக்களின் ஊழியர்கள் எனச் சிலருக்கு மட்டும்தான் அனுமதி உண்டு. அந்த இடத்தில் அல்கலாஸ் பிடிபட்டார்.
அல்கலாசுக்கு உதவிய இளையரின் பெயர் வெளியிடப்படவில்லை. 18 வயது நிரம்பாதவர் என்பதால் அவர் பெயரை வெளியிட அனுமதியில்லை.
அல்கலாஸ் ஆறு மாதக் கல்விக்காகச் சிங்கப்பூருக்கு வந்ததாக நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

