வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள விவகாரம்; நிறுவனங்களின் இயக்குநர் நொடித்துப்போனதாக அறிவிப்பு

வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள விவகாரம்; நிறுவனங்களின் இயக்குநர் நொடித்துப்போனதாக அறிவிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

20 Aug 2026 - 9:34 pm

2 mins read

400க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்காத இயக்குநர் ஒருவர் நொடித்துப்போனவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்தவரும் சிங்கப்பூர் நிரந்தரவாசியுமான ராமு பழனிவேலு எனும் அந்த இயக்குநருக்கு எதிராக ஆகஸ்ட் 13ஆம் தேதி நொடித்துப்போனவருக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அவர், குளிரூட்டும் வசதி, குழாய்ப் பழுதுபார்ப்பு, கட்டடச் சேவைகள் ஆகியவற்றை வழங்கும் ஏழு உள்ளூர் நிறுவனங்களின் இயக்குநராவார்.

கேபிஏ எஞ்ஜினியரிங், எஸ்கே இன்டஸ்டிரிஸ், விவிஆர் பிளான்ட் எஞ்ஜினியரிங் ஆகிய நிறுவனங்கள் அவற்றுள் அடங்கும்.

இந்த நிறுவனங்களைச் சேர்ந்த 407 வெளிநாட்டு ஊழியர்கள் சம்பள நிலுவைத்தொகை குறித்து புகார் அளித்திருந்தனர். அவர்களில் சிலர் இரண்டு மாதத்துக்கும் மேலாகச் சம்பளத்தைப் பெறவில்லை.

கடந்த 2025ஆம் ஆண்டில் வெவ்வேறு நேரங்களில், கேபிஏ எஞ்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஐவர் சர்ச்சை நிர்வாகத்துக்கான முத்தரப்புக் கூட்டணியை அணுகியபோதுதான் அந்தப் பிரச்சினை வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியது.

அந்தப் பிரச்சினைகள் ஒரு வாரத்திற்குள் தீர்க்கப்பட்டு, ஊழியர்கள் தங்கள் முதலாளியிடமிருந்து சம்பளத்தைப் பெற்றனர்.

ஆனால், இவ்வாண்டு மே, ஜூன் மாதங்களில், கேபிஏ எஞ்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த மற்ற நான்கு ஊழியர்கள் நிலுவையில் உள்ள சம்பளத்திற்காக கோரிக்கை மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

அந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், ஜூன் 22ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உதவி கோரி பெண்டமியரில் உள்ள மனிதவள அமைச்சின் அலுவலகத்திற்கு நேரில் சென்றனர்.

அதற்குள், நிலுவையில் இருந்த சம்பளக் கோரிக்கைகள் குறித்து மனிதவள அமைச்சுக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. ஜூன் 22ஆம் தேதி, ஊழியர்கள் அமைச்சின் அலுவலகத்தை அணுகுவதற்கு முன்பே, அதிகாரிகள் நிறுவனத்தின் இயக்குநர்களைத் தொடர்புகொள்ள முயற்சி செய்து வந்தனர்.

அப்போது, ராமு நாட்டிற்கு வெளியே இருந்தது தெரியவந்தது. ஜூன் 26ஆம் தேதி சிங்கப்பூர் திரும்பிய அவர், மனிதவள அமைச்சின் விசாரணையில் உதவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்
நொடித்துப் போதல்வெளிநாட்டு ஊழியர்நிறுவனம்