சிங்கப்பூரில் கையூட்டு வாங்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட கூட்டுரிமை நிர்வாகிக்குத் திங்கட்கிழமை (நவம்பர் 24) $20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
71 வயது தேவா சுந்தரம் என்பவர் ஜேசன் என்று அறியப்படும் 67 வயது ஓங் சின் கீ என்ற கட்டுமான நிறுவன இயக்குநரிடமிருந்து $4,200 கையூட்டு வாங்கிய குற்றத்தை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
ஓரேஞ் குரோவ் ரோட்டிற்கு அருகில் உள்ள ‘த லேடிஹில்’ கூட்டுரிமை வீடுகளின் பல்வேறு திட்டங்களுக்கு ஓங்கின் ‘ஓசிஎல் பில்டிங் சர்வீசஸ்’ நிறுவனத்தைப் பரிந்துரைக்க தேவாவுக்கு ஓங் வெகுமதியாகப் பணம் கொடுத்தார்.
ஏற்கெனவே ஓங்மீதும் அவரது 67 வயது மனைவி லியா லம் மோய், இரண்டு மகன்கள், 31 வயது ஜோர்டன் ஓங் வெய் ஹாவ், 36 வயது ஜோவி ஓங் டெங் ஹொங் ஆகியோர்மீதும் உள்ள வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை.
அந்த நால்வர்மீதும் இவ்வாண்டு ஜூன் மாதம் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
அவர்கள் வெவ்வேறு தனிநபர்களுக்கு $56,000க்கும் அதிகமான கையூட்டு கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

