சிங்கப்பூரின் ஊடகத் துறையில் உண்மையையும் நம்பிக்கையையும் நிலைநாட்டப் பாடுபட்டு வந்துள்ள ஊடகவியலாளர்களுக்குப் பான் பசிபிக் ஹோட்டலில் புதன்கிழமை (ஜூலை 16) நடைபெற்ற சிங்கப்பூர்ப் பத்திரிகையாளர் மன்ற (Singapore Press Club) விருது விழா அங்கீகாரம் வழங்கியது.
இந்த ஆண்டு மூன்று புதிய விருதுகள் வழங்கப்பட்டன. நிதி, சுகாதாரம், தொழில்நுட்பத் துறைச் செய்தியாளர்களுக்கான விருதுகள் அவை.
விருது விழாவில் சிங்கப்பூர் ஊடகத் துறையின் புகழ்பெற்றோர் பட்டியலில் (Hall of Fame) தமிழ் முரசின் முன்னாள் ஆசிரியர் முருகையன் நிர்மலா சேர்க்கப்பட்டுள்ளார். அவர் உட்பட, ஊடக வல்லுநர்கள் பத்துப் பேர் அதில் சேர்க்கப்பட்டனர்.
ஊடகத் துறையில் குறைந்தது 25 ஆண்டுகள் பணியாற்றியுள்ள 65 வயதுக்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் இந்த அங்கீகாரத்துக்குத் தகுதிபெறுகின்றனர். 2022ல் தொடங்கியது முதல் இதுவரை அந்தப் பட்டியலில் 85 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
2022ல் சிங்கப்பூர்ப் பத்திரிகையாளர் மன்றத்தின் 50வது ஆண்டு நிறைவையொட்டி அம்மன்றம் இந்த விருதுகளை அறிமுகப்படுத்தியது. முதன்முறையாக இந்த ஆண்டு தனி விருது விழாவாக நடைபெற்றது.
“50 பேருடன் இந்தப் புகழ்பெற்றோர் பட்டியலைத் தொடங்கினோம். அடுத்த ஈராண்டுகளில் மேலும் 25 பேரை இணைத்தோம். இன்று புதிதாகப் பத்துப் பேரைச் சேர்த்துள்ளோம். அந்தப் பத்து பேரில் மூவருக்கு, அவர்கள் மறைந்த பிறகு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு கூடுதல் விருதுப் பிரிவுகளையும் அறிமுகப்படுத்தியுள்ளோம்,” என்றார் மன்றத்தின் தலைவர் பேட்ரிக் டேனியல்.
சிறப்பு விருந்தினராக வருகையளித்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ பல்லாண்டுகளுக்குமுன் தமது படிப்புக்காகப் பெற்ற முதல் உபகாரச் சம்பள வாய்ப்பைச் சிங்கப்பூர் ஒலிபரப்புக் கழகத்திடமிருந்து (Singapore Broadcasting Corporation) பெற்றதை நினைவுகூர்ந்தார்.
‘நம்பகமான ஊடகத்துறை அவசியம்’
ஊடக, தகவல்துறை மீதான நம்பிக்கை குறைவதையும் அவற்றின் கட்டமைப்புகளில் பிளவுகள் ஏற்படுவதையும் அரசாங்கம் தடுக்க வேண்டும் என்றார் அமைச்சர் டியோ.
தொடர்புடைய செய்திகள்
“இன்று யார் வேண்டுமானாலும் திறன்பேசியை வைத்து, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, போலித் தகவல்களைப் பகிரும் காணொளிகளை உருவாக்கலாம்.
“இவற்றைப் ‘பொஃப்மா’ மூலம் ஓரளவு எதிர்க்கலாம். எனினும், பொஃப்மா சட்டம் அந்தப் போலித் தகவலை முழுவதுமாகக் களைவதில்லை. திருத்த அறிவிப்புடன் அது தொடர்ந்து பொதுமக்களின் பார்வைக்குக் கிடைக்கிறது. அத்தகவலை மக்கள் தொடர்ந்து நம்பலாம். பொஃப்மா, எலியோனா (ELIONA) போன்ற சட்டங்கள் அவசியம் என்றாலும் சட்டபூர்வமாக மட்டும் தவறான தகவல்களைத் தடுக்க முடியாது.
“இந்நிலையில், சிங்கப்பூரர்கள் நம்பகமான தகவல் தளங்களை அணுகுவதற்குத் தொடர்ந்து உதவும் நோக்கத்தில் அரசாங்கம் பொதுச் சேவை ஊடகங்களை ஆதரித்துவருகிறது,” என்றார் சிறப்பு விருந்தினராக வந்திருந்த தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சர் ஜோசஃபின் டியோ.
அனைத்துலக அளவில் ஊடகம் மீதான நம்பிக்கை 40 விழுக்காடாக இருக்கும் வேளையில், சிங்கப்பூரர்களில் 75 விழுக்காட்டினர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சையும் 74 விழுக்காட்டினர் சிஎன்ஏவையும் நம்புவதாக ராய்ட்டர்ஸ் அறிக்கை குறிப்பிடுவதை அவர் சுட்டினார்.
“எனினும், தொடர்ந்து நம்பிக்கையைத் தக்கவைப்பது எளிதன்று. அதனால், தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப ஊடகத் துறையினர் தம்மைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்,” என்றார் அமைச்சர் டியோ.
மறைந்த ஊடகவியலாளர்களான என் டி ஆர் சிங்கம் (முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரவுநேரப் பொறுப்பாசிரியர்), சின் கா சோங் (பான்-ஆசியச் செய்தித்தாள் கூட்டணியின் முன்னாள் சிங்கப்பூர்ப் பிரிவுத் தலைவர்; வியட்னாம் போரின்போது செய்திகள் வழங்கியவர்), ஃபெலிக்ஸ் சோ (ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் துணை ஆசிரியரும் முதல் மின்னிலக்க ஆசிரியரும்) ஆகியோரையும் அமைச்சர் டியோ தம் உரையில் நினைவுகூர்ந்தார்.
புகழ்பெற்றோர் பட்டியல்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மூத்த செய்தியாளர் விக்ரம் கண்ணா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் துணை ஆசிரியரும் முன்னாள் ஆசிய செய்தித்துறை ஃபெல்லோஷிப் இயக்குநருமான ஆலன் ஜான், சிங்கப்பூர் ஒலி/ஒளிபரப்பு நிறுவன முன்னாள் மூத்த கண்ட்ரோலரும் ‘இன்கன்வீனியன்ட் குவெஷ்டின்ஸ்’ நிறுவனருமான விஸ்வா சதாசிவன், முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரவுநேரப் பொறுப்பாசிரியர் என் டி ஆர் சிங்கம், மீடியாகார்ப் பப்ளிஷிங் முன்னாள் இயக்குநர் மைக்கல் சியாங், சாவ்பாவ் முன்னாள் இணை ஆசிரியர் கியாம் மெங் டக், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் ஃபீச்சர்ஸ் செய்தி ஆசிரியர் லுலின் ரூய்ட்டன்ஸ், ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் முன்னாள் துணை ஆசிரியர் ஃபெலிக்ஸ் சோ, பான்-ஆசியச் செய்தித்தாள் கூட்டணியின் முன்னாள் சிங்கப்பூர்ப் பிரிவுத் தலைவர் சின் கா சோங் ஆகியோரும் புகழ்பெற்றோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
தமிழ் முரசு முன்னாள் ஆசிரியருக்கு விருது
திருவாட்டி நிர்மலா, 71, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் 1989ல் பணியாற்றத் தொடங்கினார். அதற்குமுன் அவர் உள்துறை அமைச்சில் மூத்த ஆய்வு அதிகாரியாகப் பணிபுரிந்தவர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் உள்நாட்டுச் செய்தி, வெளிநாட்டுச் செய்தி, அரசியல் செய்தி, மூத்த எழுத்தாளர் குழு எனப் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர் அவர்.
தமிழ் முரசில் பணியாற்றத் தொடங்குமுன்னர் அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சில் மூத்த அரசியல் செய்தியாளராகப் பொறுப்பு வகித்தார்.
டாக்டர் சித்ரா ராஜாராமிடமிருந்து 2005 செப்டம்பர் 18ல் திருவாட்டி நிர்மலா தமிழ் முரசு ஆசிரியர் பொறுப்பை ஏற்றார்.
அவர் பொறுப்பேற்கும் வேளையில் தமிழ் முரசு வார நாள்களில் 9,500 பிரதிகளும், வார இறுதிகளில் 15,000 பிரதிகளும் விற்பனையாகின.
அவர் பொறுப்பேற்றபின் பத்திரிகை விற்பனை படிப்படியாகப் பெருகி வாரநாள்களில் சராசரியாக 18,000 பிரதிகளும் வார இறுதிகளில் 26,000 பிரதிகளும் விற்பனையாகின.
விளம்பரதாரர்களை நேரடியாகத் தொடர்புகொண்டு தமிழ் முரசுக்கு விளம்பரங்களைப் பெற்றார் திருவாட்டி நிர்மலா. பண்டிகை நாள்கள், தேசிய தினம் போன்ற சிறப்பு நாள்களில் பத்திரிகையை ஆதரவாளர் ஆதரவுடன் மொத்தமாக விற்பனை செய்து வாசகர்களுக்கு இலவசமாகவும் வழங்கினார்.
2011 ஜூன் மாதம் வரை தமிழ் முரசு ஆசிரியராகப் பணிபுரிந்தார் திருவாட்டி நிர்மலா.
அவர் சமூகப் பணிகளிலும் ஈடுபாடு கொண்டவர்.
அவர் சைல்ட்@ஸ்திரீட் 11 எனும் லாப நோக்கமற்ற அமைப்பைத் தொடங்கி, கடினமான பின்னணிகளைச் சார்ந்த குழந்தைகளுக்குக் கல்வியும் பராமரிப்பும் வழங்கினார்.
அதற்காக, அவர் அப்போதைய துணைப் பிரதமர் தர்மன் சண்முகரத்னமிடமிருந்து 2018ல் ‘சிங்கப்பூர் சைலன்ட் ஹீரோஸ்’ விருதையும் பெற்றார்.
2018ல் அவர் ‘பயணங்கள்: சிங்கப்பூரில் தமிழர்கள், 1800 முதல் இன்றுவரை’ என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டார்.
2021ஆம் ஆண்டிலிருந்து அவர் ‘ரிவர் அகாடமி’ எனும் அறநிறுவனத்தை நடத்திவருகிறார். கடினமான பின்னணிகளைச் சார்ந்த 7 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களைப் பராமரித்து உணவு, கல்வி போன்றவற்றை அந்நிறுவனம் வழங்குகிறது.
மறக்கமுடியா நினைவுகள்
மறைந்த முன்னாள் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரவுநேரப் பொறுப்பாசிரியர் என் டி ஆர் சிங்கம் சார்பாக அவருடைய மனைவியும் சமூக ஆர்வலருமான திருவாட்டி கோன்ஸ்டன்ஸ் சிங்கம் அவ்விருதைப் பெற்றார்.
திரு சிங்கம் தன் வாழ்க்கை முழுவதையும் பத்திரிகைத் துறைக்கு அர்ப்பணித்தவர். தன் 20களில் ‘மலாயா டிரிபியூன்’ இதழில் செய்தியாளராகச் சேர்ந்த அவர், பின்பு ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் சேர்ந்தார்.
1961 முதல் 1969 வரை அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கீழ் இயங்கிய ‘மலாய் மெய்ல்’ பத்திரிகையின் ஆசிரியராக, கோலாலம்பூரில் பணியாற்றினார். அவர் தேசிய செய்தியாளர் தொழிற்சங்கத்தின் செயலாளராகவும் பொறுப்பு வகித்தார்.
1969, மே 13ஆம் தேதி நடந்த இனக் கலவரத்தின்போது அவர் மூன்று இரவுகள் அலுவலகத்திலேயே மாட்டிக்கொண்டதை நினைவுகூர்ந்தார் திருவாட்டி சிங்கம்.
“எங்கள் வீட்டுக்கும் அலுவலகத்துக்கும் இடையேயான பாதை முழுவதும் கலவரங்கள் நிகழ்ந்தன. அதனால் அவரால் திரும்ப இயலவில்லை,” என்றார் திருவாட்டி சிங்கம். அப்போது அவர் வீட்டிலிருந்தபடி கணவர் பாதுகாப்பாக வீடு திரும்புவதற்குக் காத்திருந்தார்.
அதன்பின் சிங்கப்பூர், மலேசியாவுக்கென இரு நிறுவனங்களாகப் பிரிந்ததும் மனைவியுடன் சிங்கப்பூர் திரும்பி, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பிரஸ்சில் (சிங்கப்பூர்) பணியாற்றினார் திரு சிங்கம். தன் இறுதி மூச்சு வரை அவர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் இரவுநேரப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினார்.
“செய்தித் துறையில் உயர் தரத்தைக் கடைப்பிடிக்கப் பாடுபடுவோருக்கு இத்தகைய அங்கீகாரம் வழங்கப்படுவதில் நான் மகிழ்கிறேன்,” என்றார் திருவாட்டி சிங்கம்.