கேகே மகளிர் மற்றும் சிறார் மருத்துவமனைக்குப் பின்னால் உள்ள புக்கிட் தீமா சாலைக்கு அருகில் உள்ள கட்டுமானத் தளத்தில், கல்லறைகள் இல்லாத நான்கு சவப்பெட்டிகள் 2025 அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கண்டெடுக்கப்பட்டன.
இத்தகவலை நிலப் போக்குவரத்து ஆணையம், தனது அறிக்கையில் தெரிவித்தது.
அந்த அறிவிப்பில், இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் அல்லது சந்ததியினர், உடல் பாகங்கள் தொடர்பான உரிமை கோர அல்லது பொருத்தமான தகவல்களை வழங்க தங்களைத் தொடர்பு கொள்ளுமாறு ஆணையம் தெரிவித்துள்ளது.
அறிவிப்பு வெளியான 14 நாள்களுக்குள் எந்த கோரிக்கையும் இல்லாதபட்சத்தில், அதன் தொடர்புடைய விதிமுறைகளின்படி தேவையான ஏற்பாடுகளைச் செய்யும் என்றும் ஆணையம் கூறியது.
மதர்ஷிப்பின் கேள்விகளுக்குப் பதிலளித்த ஆணையம், கல்லறைகள் இல்லாத மொத்தம் நான்கு சவப்பெட்டிகள் கண்டெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தியது. அதன் தொடர்பின் ஆணையம் காவல்துறையில் புகார் அளித்துள்ளது.
சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட இடம் வடக்கு-தெற்கு சுரங்க விரைவுச்சாலைக் கட்டுமானத்தின் ஒரு பகுதியாகும்.
புக்கிட் பிரவுனின் வரலாற்றை மையமாகக் கொண்ட ‘ரோஜாக் நூலகர்’ என்ற வலைப்பதிவை நடத்தும் பீட்டர் பாக், சவப்பெட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதி ஒரு காலத்தில் ஒரு கிறிஸ்தவ இடுகாடாக இருந்ததாக ஒரு பதிவில் சுட்டிக்காட்டினார்.
அந்தப் பதிவில், ஒரு தேவாலய அமைப்பு சவப்பெட்டிகளை உரிமை கோரும் என்று திரு பாக் நம்பிக்கை தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
இறந்தவரின் நெருங்கிய உறவினர்கள் அல்லது சந்ததியினர் +6594352425 என்ற எண்ணில் நிலப் போக்குவரத்து ஆணையத்தை அழைக்கலாம் அல்லது feedback@lta.gov.sg என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

