சிங்கப்பூரில் 18 பேரை ஏமாற்றி பணம் பறித்த பெண்ணுக்குப் புதன்கிழமையன்று (அக்டோபர் 1) ஈராண்டு, ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
மோசடிக் குற்றம் புரிந்து அவர் ஏறத்தாழ $277,000 பெற்றுக்கொண்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 40 வயது தியாங் கிம் ஹுவா, மூன்று பிள்ளைகளுக்குத் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துக்கும் டிசம்பர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் அவர் மோசடிக் குற்றங்களைப் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மோசடிச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைச் சூதாட்டத்தால் ஏற்பட்ட கடனை அடைக்க அவர் பயன்படுத்தினார்.
விசாரணை நடைபெற்றுக்கொண்டிருந்தபோதும் சிங்கப்பூரரான தியாங் மீண்டும் மோசடிக் குற்றம் புரிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட 13 பேரிடம் பறித்த பணத்தில் ஒரு பகுதியை தியாங் திருப்பிக் கொடுத்துவிட்டார்.
கெரோசல் மின்வர்த்தகத் தளத்தில் தமது நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள், சக ஊழியர்கள், மற்ற வாடிக்கையாளர்கள் ஆகியோரை தியாங் குறிவைத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
தம்மிடம் மின்னணுவியல் பொருள்கள் இருப்பதாகப் பொய் கூறி அவர்களை அந்தப் பெண் ஏமாற்றினார்.
உதாரணத்துக்கு தம்மிடமிருந்து குறைந்த விலைக்கு ஐஃபோன்களை வாங்கி கூடுதல் விலைக்கு விற்கலாம் என்று தியாங் தெரிவித்தார்.
ஆனால் அவரிடம் ஐஃபோன்கள் இல்லை என்று அரசாங்க வழக்கறிஞர் கூறினார்.
நம்பிக்கையை ஏற்படுத்தவும் தாம் ஓர் உண்மையான வியாபாரி என்பதை காட்டிக்கொள்ளவும் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டு சில பரிவர்த்தனைகளை அவர் பூர்த்தி செய்தார்.
தியாங்கிடம் ஏமாந்தவர்களில் அவருடன் வேலை செய்யும் 34 வயது ஆடவரும் ஒருவர்.
அவரிடமிருந்து தியாங் $24,000க்கும் அதிகமான தொகையைப் பறித்தார்.
அவரிடம் தியாங் $3,500 திருப்பிக் கொடுத்துவிட்டார். 2023 பிப்ரவரியில் தியாங் கைது செய்யப்பட்டார். அவர்மீது மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மோசடிக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.