சிங்கப்பூரில் ஒவ்வொரு பிள்ளைக்கும் இலவச கல்வி, உணவுத் திட்டங்கள், சுகாதாரப் பராமரிப்பு ஆகியவை வழங்கப்படவேண்டும் என்று சீர்திருத்த மக்கள் கூட்டணி கூறியுள்ளது.
நாடாளுமன்றத்திற்குச் செல்ல நியமிக்கப்பட்டால் அது தொடர்பான கொள்கைகளை வகுக்க கூட்டணி குரல் கொடுக்கும் என்றது.
பொத்தோங் பசாரில் உள்ள உட்லீ வில்லேஜ் உணவங்காடி நிலையத்தில் தொகுதி உலா சென்றபோது சீர்திருத்த மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலாளர் லிம் டியென் (ஏப்ரல் 13) இலவசத் திட்டங்களுக்கு எங்கிருந்து நிதி வரும் என்பதைக் குறிப்பிடவில்லை.
கூடிய விரைவில் அந்த விவரங்கள் கூட்டணியின் ஃபேஸ்புக் பக்கத்தில் இடம்பெறும் என்று திரு டியென் சொன்னார்.
சிங்கப்பூரின் பிறப்பு விகிதமும் 0.97 என்ற அபாயகரமான நிலைக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாகக் கூறிய அவர், வெளிநாட்டினர் எண்ணிக்கையை அதிகரிப்பது அதற்குத் தீர்வாகாது என்று நம்புவதாகக் குறிப்பிட்டார்.
பாலர்ப் பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை சிங்கப்பூர் பிள்ளைகளுக்கு இலவச கல்வி வழங்குவதன் மூலம் பெற்றோரின் நிதிச் சுமையைக் குறைக்க முடியும் என்று சீர்திருத்த மக்கள் கூட்டணி தெரிவித்தது.
பிள்ளைகளுக்குப் போதுமான ஆதரவு கொடுக்க முடியாததால் பலர் குடும்பங்களைத் தொடங்க தயங்குவதாகத் திரு டியென் சொன்னார்.

