வன்போலி செயற்கை நுண்ணறிவுப் பதிவுகளுக்கும் உண்மையான பதிவுகளுக்கும் உள்ள வித்தியாசத்தை அடையாளம் காண இணையப் பயனர்களுக்கு உதவும் வகையில் இலவசத் தொழில்நுட்பச் சாதனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
இச்சாதனத்துக்கு ‘புரோவோ’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
புதிய பதிவாளர்கள் உட்பட ஏனைய இணையப் பயனர்களுக்கும் இந்தச் சாதனம் அறிமுகப்படுத்தப்படுகிறது.
இணையத்தில் உள்ள படங்கள், காணொளிகள் ஆகியவற்றில் அடையாளக் குறியீடுகளைப் பதிவிட ‘புரோவோ’ சாதனம் பயன்படுத்தப்படும்.
இலவச ‘புரோவோ’ இணைய உலாவி நீட்சியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்.
வன்போலி செயற்கை நுண்ணறிவுப் பதிவுகளையும் இணையத்தில் வலம் வரும் மற்ற பொய்த் தகவல்களையும் அடையாளம் காண, சிங்கப்பூரின் ஆற்றலை மேம்படுத்தும் நோக்கில் இணையப் பாதுகாப்புக்கான மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப நிலையம் அறிமுகப்படுத்தும் முதல் சில சாதனங்களில் ‘புரோவோ’வும் அடங்கும்.
நிலையத்தை ஏஸ்டார் அமைப்பு நடத்துகிறது.
சிங்கப்பூரின் ஆய்வு, புத்தாக்கம், தொழில்முனைவு 2025 திட்டத்தின்கீழ் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நிலையம் $50 மில்லியன் நிதி பெறும்.
தொடர்புடைய செய்திகள்
இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள், காணொளிகள் ஆகியவற்றில் பதிக்கப்பட்டுள்ள அடையாளக் குறியீடுகளை இணையப் பயனர்கள் பார்வையிடலாம். படங்கள், காணொளிகள் ஆகியவை மறுபதிவிடப்பட்டாலும் அல்லது பகிர்ந்துகொள்ளப்பட்டாலும் அவற்றில் உள்ள அடையாளக் குறியீடுகளைப் பார்க்கலாம்.
படங்கள், காணொளிகள் ஆகியவற்றைப் பதிவேற்றம் செய்தவர் தொடர்பான விவரங்கள், அவை பதிவேற்றம் செய்யப்பட்ட தேதி, பதிவேற்றம் செய்யப்படுவதற்கு முன்பு அவற்றில் மாற்றங்கள் செய்யப்பட்டனவா போன்ற தரவுகளை அடையாளக் குறியீடுகள் காட்டும்.
படங்கள் அல்லது காணொளிகள் அனுமதி இன்றி மாற்றி அமைக்கப்பட்டிருந்தால் அவற்றின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் அடையாளக் குறியீடுகள் அவற்றைத் தானியக்க முறையில் அகற்றிவிடும்.
இலவசத் தொழில்நுட்பச் சாதனம் தொடர்பான கூடுதல் விவரங்கள் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

