ரிவர் வேலியில் அமைந்துள்ள கடைவீடு ஒன்றின் தூண்மீது குப்பை வண்டி மோதியது. இதனால் அந்தத் தூண் சேதமடைந்தது.
இச்சம்பவம் ஜூலை 15ஆம் தேதி காலை நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. குப்பை வண்டி பின் திசை நோக்கி வந்தபோது தூணில் மோதியது.
இதுகுறித்து 80 கிம்யாம் சாலையில் உள்ள பார்க் அவென்யூ ராபர்ட்சன் குடியிருப்பின் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார்.
“குப்பை வண்டி காலை 9.40 மணிவாக்கில் கட்டடத்தின் தூண்மீது மோதியது. அதிகாரிகளுக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,” என்றார் அவர்.
சேதமடைந்த தூணுள்ள கடைவீட்டில் எந்த வாடகைதாரரும் இல்லை.
இந்நிலையில், கட்டடப் பொறியாளர்கள் கட்டடத்தின் பாதுகாப்பு குறித்து ஆராய்ந்தனர். கட்டடம் பாதுகாப்பாக உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தூண் அருகே யாரும் செல்லாமல் இருக்க அங்குத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
அதேபோல் சேதமடைந்த தூணுக்குப் பக்கபலமாகத் தற்காலிகமாகச் சில தூண்கள் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், கட்டடக் கட்டுமான ஆணையம் கட்டட உரிமையாளர் சேதமடைந்த தூணை நிரந்தரமாகச் சரிசெய்ய அறிவுறுத்தியுள்ளது.

