சாங்கி விமான நிலையத்தின் மூன்றாம் முனைய இடைவழிப் பாதையில் ஆறு வயது சிறுமி ஒருவரை ஆடவர் ஒருவர் செவ்வாய்க்கிழமையன்று (டிசம்பர் 9) மானபங்கம் செய்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்காவைச் சேர்ந்த 46 வயது ஜெஃப்ரி ஆலன் கரீரோ இக்குற்றத்தைப் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவர்மீது மானபங்கக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதுடன் அவரை மருத்துவப் பரிசோதனைக்காக மனநலக் கழகத்தில் தடுப்புக் காவலில் வைக்கவும் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 11) உத்தரவிடப்பட்டது.
சம்பவத்தன்று இருக்கையில் அமர்ந்து தனது தாயுடன் உறங்கிகொண்டிருந்த சிறுமியிடம் ஜெஃப்ரி தகாத முறையில் நடந்துகொண்டதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
திடீரென்று கண் விழித்துப்பார்த்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயாரிடம் அவர் சிக்கிகொண்டதாகக் காவல்துறை பேச்சாளர் கூறினார்.
தன்னிடமிருந்து நழுவிய அந்த ஆடவர் குறித்து அந்தத் தாய் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தார்.
கண்காணிப்புக் கருவியில் பதிவான காட்சிகளைப் பயன்படுத்தி, தகாத முறையில் நடந்துகொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை விமான நிலையக் காவல்துறை பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் அடையாளம் கண்டு, நான்கு மணி நேரத்திற்குள் அவர் கைதுசெய்யப்பட்டார்.
டிசம்பர் 23ஆம் தேதி, மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

