சிங்கப்பூரை அடிப்படையாகக் கொண்ட குளோபல் பள்ளிகள் குழுமம் தனது 25ஆம் ஆண்டு நிறைவை எட்டியுள்ளது.
அனைத்துலக, தனியார் பள்ளிகளின் கட்டமைப்பான குளோபல் பள்ளிகள் குழுமம் சிங்கப்பூரின் ஆர்ச்சர்ட் சாலையில் 2001ஆம் ஆண்டு அதன் கதவுகளைத் திறந்தது.
இம்மாதம் 18ஆம் தேதி, ஒன் வார்ல்ட் அனைத்துலக பள்ளியின் மின்னிலக்க வளாகத்திலும் பொங்கோலில் உள்ள குளோபல் இந்தியன் அனைத்துலக பள்ளியில் ஸ்மார்ட் வளாகத்திலும் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆசிய நாடுகளில் உள்ள 64 வளாகங்களில் 45,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். 2030ஆம் ஆண்டுக்குள் ஜப்பான், இந்தியா, சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் புதிதாக 20 புதிய அனைத்துலகப் பள்ளிகளைத் திறக்க குளோபல் பள்ளிகள் குழுமம் திட்டமிட்டுள்ளது.
குழுமத்தின் 25ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தில் சட்ட அமைச்சரும் இரண்டாம் உள்துறை அமைச்சருமான எட்வின் டோங் பங்கேற்றார். அவருடன் 20க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
குளோபல் பள்ளிகள் குழுமத்துடனான திரு டோங்கின் உறவு 2015ஆம் ஆண்டு தொடங்கியது. திரு டோங் அடித்தள ஆலோசகராகச் சேவையாற்றிய ஜூ சியெட் தொகுதியில் குழுமத்தின் பள்ளிகளில் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.
அந்தக் குழுமம், சமூகத்துக்கு எப்போதும் பங்காற்றி வந்ததை நினைவுகூர்ந்த திரு டோங், 2022ஆம் ஆண்டு பொது பசுமை வட்டாரமாக அதன் வளாகத்தின் ஒரு பகுதியை சிக்லாப்பில் உள்ள யெரோ பூங்காவின் உருவாக்கத்திற்குக் கொடுத்ததைக் குறிப்பிட்டார்.
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், நாட்டின் அனைத்துலகத் தன்மையை அனைத்துலகப் பள்ளிக் கட்டமைப்புடன் ஒப்பிட்டார்.
“குளோபல் பள்ளிகள் குழுமத்தின் வகுப்பறைகள் இன்று 14 நாடுகளைச் சேர்ந்த இளையரை ஒன்றிணைக்கிறது. அது சிங்கப்பூரை அதிகம் பிரதிபலிக்கிறது. அதே கொள்கையைத்தான் நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்,” என்றார் திரு டோங்.
மாணவர்கள், கலைஞர்கள் ஆகியோர் கதக், டிகிர் பராட் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளைப் படைத்தனர்.
மேலும், சமூக ஆதரவாக, குளோபல் பள்ளிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள பல்வேறு திட்டங்களுக்கும் அமைப்புகளுக்கும் $100,000 நிதியை வழங்க உறுதியளித்தது.
கொண்டாட்ட நிகழ்ச்சியில் குழுமத்தின் ஆண்டு நிறைவுக் கண்காட்சியும் இடம்பெற்றது. பள்ளியின் வரலாறு, கற்றல் பண்புகள், முன்னாள் மாணவர்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கண்காட்சி முன்வைத்தது.
பள்ளியில் உள்ள மாணவர்களுக்கும் சிங்கப்பூரின் கலாசாரம் பற்றி கற்பிக்கப்படுகிறது. கடல்நாக நடனம் போன்றவற்றைக் கற்கும் மாணவர்கள் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களின்போது தாங்கள் கற்றுக்கொண்ட திறனை வெளிப்படுத்துவர்.
பள்ளிக்கூடத்திலிருந்து கல்வி முடிந்து 12 ஆண்டுகளுக்குமுன் வெளியேறிய திரு பராஸ் கிருஷ்ணா பாட், மாணவர்கள் ஒருங்கிணைக்கப்படுவதற்கு பள்ளி எப்போதும் முன்னுரிமை அளித்ததைக் குறிப்பிட்டார்.
“தேசியச் சேவைக்குச் சென்றபோது நான் பதறவில்லை. பன்முகத்தன்மையான சூழலுக்கு ஏற்ப இருப்பதற்குப் பள்ளி கற்பித்தது. சிங்கப்பூர், இந்தியா ஆகிய இரண்டையும் குறித்த தனித்துவமான கண்ணோட்டம் எனக்கு உள்ளது,” என்றார் 30 வயது பராஸ்.
சிங்கப்பூரின் கலாசார சூழலைச் சுட்டிய குளோபல் பள்ளிகள் குழுமத்தின் இணை நிறுவனர் அதுல் டெமுர்னிக்கர், சிங்கப்பூரில் பள்ளிகளைத் தொடங்கியது நல்ல பலனளித்தது என்றார்.
“உலகில் வெகு சில நாடுகளே வெளிநாட்டினருக்குச் சொந்த நாட்டில் இருக்கும் அனுபவத்தைத் தரும். சிங்கப்பூர் அத்தகைய நாடுகளில் ஒன்று. அதைத்தான் கலாசார ரீதியாக மக்கள் அதிகம் பாராட்டுகின்றனர்,” என்றார் திரு அதுல்.
