தெம்பனிசில் பேருந்துச் சேவைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த கோ அஹெட் நடவடிக்கை

தெம்பனிசில் பேருந்துச் சேவைகளின் நம்பகத்தன்மையை மேம்படுத்த கோ அஹெட் நடவடிக்கை

2 mins read
49c082be-d679-4c8a-b64e-14f6244ae8f0
தெம்பனிஸ் பேருந்துச் சந்திப்பு நிலையத்தில் திங்கட்கிழமை (செப்டம்பர் 14) பேருந்துகளுக்காகக் காத்திருந்த பயணிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தெம்பனிசில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருக்க நேரிடுவதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர்களுக்கான பயிற்சியையும் ஆதரவையும் கோ அஹெட் சிங்கப்பூர் நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

கடந்த ஜூலை 19ஆம் தேதிமுதல் தெம்பனிசில் 29 பேருந்துச் சேவைகளை அந்நிறுவனம் ஏற்று நடத்தி வருகிறது.

அதன்பிறகு, பேருந்துகள் தாமதமாக வருவதாலும் ஒரே பேருந்துச் சேவை அடுத்தடுத்து வருவதாலும் தங்களின் அன்றாடப் பயணங்கள் நிச்சயமற்றதாக மாறியுள்ளதாக தெம்பனிஸ் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பே யாம் கெங்கிடம் குடியிருப்பாளர்கள் கூறினர்.

இதையடுத்து, அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகளிடம் இந்த விவகாரத்தைக் கொண்டு சென்றதாக கலாசார, சமூக, இளையர்துறை மற்றும் போக்குவரத்துத் துணை அமைச்சருமான திரு பே தெரிவித்தார்.

அங்கு பணியாற்றும் ஓட்டுநர்களில் ஏறத்தாழ 40 விழுக்காட்டினர் புதியவர்கள் என்பதால் அவர்களுக்குப் புதிய வழித்தடங்களையும் செயல்பாடுகளையும் புரிந்துகொள்ள கூடுதல் காலம் தேவைப்படுவதாக கோ அஹெட் விளக்கமளித்தது.

மேலும், சாங்கியில் உள்ள புதிய ஈஸ்ட் கோஸ்ட் ஒருங்கிணைந்த பணிமனைக்குச் சேவைகள் மாறியதாலும் ஓட்டுநர்கள் வேலைக்குச் செல்வதிலும் அவர்களின் செயல்திறனிலும் தற்காலிகப் பாதிப்புகள் ஏற்பட்டன. இருப்பினும், பெரும்பாலான விவகாரங்கள் தற்போது தீர்க்கப்பட்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

பயணிகளுக்குச் சீரான பேருந்துச் சேவையை உறுதிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கோ அஹெட் பேச்சாளர் கூறினார்.

புதிய ஓட்டுநர்களுக்கு வழிகாட்ட அனுபவமிக்க ஓட்டுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், பேருந்து நிலையங்களிலும் முக்கியப் பேருந்து நிறுத்தங்களிலும் கூடுதல் ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டுச் சேவைகள் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றன.

இதன்மூலம் பேருந்துகள் குறித்த நேரத்திற்கு இயங்குவது உறுதிசெய்யப்படும் என்றும் சேவைத் திறன் தொடர்ந்து மேம்பட்டு வருவதாகவும் கோ அஹெட் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
தெம்பனிஸ்பேருந்துஎஸ்பிஎஸ் டிரான்சிட்