வெளிநாட்டு மத்திய வங்கிகளும் அரசாங்க அமைப்புகளும் வரும் அக்டோபர் மாதத்திலிருந்து சிங்கப்பூர் நாணய ஆணையத்திடம் (எம்ஏஎஸ்) தங்களின் தங்கக் கையிருப்பைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
தங்க வர்த்தகம், சேமிப்பு ஆகியவற்றுக்கான மையமாக சிங்கப்பூர் விளங்கிவருகிறது. அந்த நிலை வலுவடைந்துவரும் வேளையில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இது, சிங்கப்பூரின் வர்த்தகச் சேமிப்புக் கொள்ளளவுக்கு (commercial vaulting capacity) மெருகூட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் கொள்ளளவு
சிங்கப்பூரிடம் தற்போது 2,000 டன்னுக்கும் மேலான சேமிப்புக் கொள்ளளவு உள்ளது. புல்லியன் எனப்படும் மதிப்புமிக்க உலோகத் தகடுகள் மற்றும் கட்டிகளுக்கான வங்கிகள், நிறுவன முதலீட்டாளர்கள், பெரும் செல்வந்தர்கள் உள்ளிட்ட தரப்பினர் அந்த சேமிப்புக் கொள்ளளவைப் பயன்படுத்துகின்றனர்.
துணைப் பிரதமர் கான் கிம் யோங் இத்தகவல்களை வெளியிட்டார். ஷங்கிரிலா ஹோட்டலில் நடைபெற்ற ஆசிய பசிபிக் மதிப்புமிக்க உலோகங்கள் மாநாட்டில் திங்கட்கிழமை (ஜூன் 15 ) அவர் பேசினார்.
பாதுகாப்பாக வைத்துக்கொள்வதையும் தாண்டி சில வெளிநாட்டு வங்கிகளும் வெளிநாட்டு அரசாங்கத் தரப்புகளும் தாங்கள் வைத்திருக்கும் தங்கத்தைத் தொடர்ந்து கவனமாகக் கையாளவும் எண்ணம் கொண்டிருக்கலாம். அதனால் சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூரில் இயங்கும் குறிப்பிட்ட சில புல்லியன் வங்கிகளுக்கு தங்கக் கணக்குகளை வழங்கவுள்ளது.
அவ்வங்கிகள் தங்கம் தொடர்பான சேவைகளையும் உலோகங்களை ரொக்கமாக மாற்றும் சேவைகளையும் மேலும் சிறந்த முறையில் வழங்க வகைசெய்வது இலக்காகும்.
தொடர்புடைய செய்திகள்
“ஆசிய கண்டத்துக்கான பங்குச் சந்தை கையிருப்பு சொத்துகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொண்டு, அவற்றைத் தொடர்ந்து கையாண்டு, சந்தை அளவில் அவற்றில் ரொக்கமாக மாற்ற வகைசெய்யும் அதிகார வரம்புப் பகுதியாக (jurisdiction) இருக்க சிங்கப்பூர் முனைகிறது; அதை இந்நடவடிக்கை வலுப்படுத்துகிறது,” என்றார் திரு கான்.
உலக தங்கச் சந்தையில் சிங்கப்பூர்
உலகத் தங்கச் சந்தையில் சிங்கப்பூரின் நிலையை வலுப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்களையும் திரு கான் அறிவித்தார்.
முகப்புகளிலேயே தங்கப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வகைசெய்யும் முறையை சிங்கப்பூர் பங்குச்சந்தை இவ்வாண்டிறுதிக்குள் அமைக்கவிருப்பது அவற்றில் ஒன்றாகும். அதோடு, வங்கிகளுக்கு இடையிலான வர்த்தகம் அடுத்த ஆண்டிலிருந்து வளரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

