படைப்பாற்றல்மிக்க எழுத்துக்கான தங்கமுனை விருதை இவ்வாண்டு 36 வெற்றியாளர்கள் பெறவிருக்கின்றனர்.
கவிதை, சிறுகதை, உள்ளூர்ச் சிறுகதை ஆகிய பிரிவுகளில் படைப்புகளைச் சமர்ப்பித்தாேரிடையே இந்த வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஆர்ட்ஸ் ஹவுஸ் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, சிங்கப்பூர்ப் புத்தக மன்றத்தால் இணைந்து வழங்கப்படும் இந்த விருது, தேசியக் கலைகள் மன்றத்தின் ஆதரவைப் பெற்றுள்ளது.
17வது முறையாக நடைபெற்ற இந்தப் போட்டிக்கான முடிவுகள் டிசம்பர் 3ஆம் தேதி வெளியிடப்பட்டன.
ஈராண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்தப் போட்டி, வளர்ந்துவரும் திறனாளர்களை அடையாளம் காட்டுகிறது. ஆங்கிலம், தமிழ், மலாய், சீனம் ஆகிய மொழிகளில் சமர்ப்பிக்கப்பட்ட படைப்புகளின் எண்ணிக்கையும் பன்முகத்தன்மையும் இவ்வாண்டு அதிகரித்துள்ளது.
தமிழ்ப்பிரிவின் கவிதை அங்கத்தில் முதல் பரிசை நெ ரெமிலா, ‘தனிமையெனும் நண்பன்’ உள்ளிட்ட கவிதைகளுக்காகவும் இரண்டாவது பரிசை முனைவர் விஸ்வலிங்கம் தேன்மொழி, ‘கூட்டை இழந்த நத்தை’ உள்ளிட்ட கவிதைகளுக்காகவும், மூன்றாவது பரிசை சங்கீதா கந்தசாமி, ‘சாம்சூயி’ உள்ளிட்ட கவிதைகளுக்காகவும் பெற்றனர்.
‘துரோகத்தின் முதல் ருசி’ உள்ளிட்ட கவிதைகளைப் புனைந்த ப்ரியதர்ஷினி கஜேந்திரனுக்கு கெளரவப் பாராட்டு (Honourable Mention) வழங்கப்படவுள்ளது.
சிறுகதை அங்கத்தில் சங்கப்பள்ளி வாசுகியின் ‘தவித்த நினைவுகள்’ என்ற படைப்புக்காக முதல் பரிசும், சுஜா செல்லப்பனின் ‘உன்னி நெக்குருகி’ என்ற படைப்புக்காக இரண்டாவது பரிசும், கங்கா பாஸ்கரனுக்கு ‘இரவு நேர மண்ணின் இறுதி மூச்சு’ என்ற படைப்புக்காக மூன்றாவது பரிசும் வழங்கப்படவுள்ளன. ஜெய்குமார் ப்ரியாவின் ‘சிதைவு’ என்ற சிறுகதைக்கு கெளரவப் பாராட்டு வழங்கப்படவுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
எழுத்தாளர்கள் தங்களுக்கே உரித்தான குரலைக் கண்டுபிடித்து, வாசகர்களுடன் இணைந்து சிங்கப்பூரின் பண்பாட்டுக்கு அர்த்தமுள்ள முறையில் பங்களிக்க இப்போட்டி வகைசெய்கிறது.
தமிழ்க்கவிதை அங்கத்தில் முதல் பரிசுபெற்ற விக்டோரியா தொடக்கக் கல்லூரி மாணவி 17 வயது ரெமிலா, “பரிசு என்றாலே மகிழ்ச்சிதானே! அதுவும் தமிழ்க்கவிதைக்கான தங்கமுனை விருது என்பது மிகுந்த உற்சாகத்தையும் மேலும் சாதிக்கவேண்டும் என்ற பொறுப்பையும் அளிக்கிறது,” எனத் தெரிவித்தார்.
விருது கிட்டும் எனத் தாம் எதிர்பார்க்கவில்லை என்று தமிழ் சிறுகதைக்கான விருதைப் பெற்ற தொடக்கப்பள்ளித் தமிழாசிரியர் சங்கப்பிள்ளை வாசுகி, 50, கூறினார்.
“தயங்காமல் முயல எடுத்த முடிவுக்காக மகிழ்கிறேன். மேன்மேலும் வளரவும் படைக்கவும் விருது ஊக்கமளிக்கிறது,” என்றார் திருவாட்டி வாசுகி.
புதுமை, உணர்வுபூர்வமான ஆழம், சொல்லாடல் ஆகியவற்றின் அடிப்படையில் வெற்றிபெற்ற படைப்புகள் தனித்து நிற்பதாக ஆர்ட் ஹவுஸ் தெரிவித்தது.

