சிங்கப்பூரில் அதன் 17வது சினிமா அரங்கை டௌன்டவுன் ஈஸ்ட் பேரங்காடிக் கட்டடத்தில் கோல்டன் வில்லேஜ் (GV) நிறுவனம் வருகின்ற நவம்பர் 27ஆம் தேதி திறக்கவுள்ளது.
முன்பு கெத்தே சினிமா நிறுவனம் நான்காம் மாடியில் இயக்கிய ‘E!Hub @ Downtown East’ எனப்படும் இடத்தை கோல்டன் வில்லேஜ் எடுத்து நடத்தவிருக்கின்றது.
ஜிவியின் புதிய திட்டத்தின்படி, ஆறு அரங்குகள் மொத்தம் 980 இருக்கைகளுடன் செயல்படும். வழக்கமான திரைப்படக் காட்சிகளுடன் அந்த அரங்குகளை தனியார் நிகழ்ச்சிகளுக்கும் பெருநிறுவனங்களின் தேவைகளுக்கும் பயன்படுத்திக்கொள்ளலாம்.
திறப்புவிழாவை முன்னிட்டு நவம்பர் மாதம் 27ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதிவரை பற்பல சிறப்பு நிகழ்வுகள் அங்கு இடம்பெறவிருக்கின்றன.
முதியோருக்கும் மாணவர்களுக்கும் சலுகை விலையில் டிக்கெட்டுகள் மற்றும் அதிர்ஷ்டசாலிகளுக்கு இலவச சினிமா டிக்கெட்டுகள் அந்த காலகட்டத்தில் வழங்கப்படும்.
“தீவின் கிழக்கில், ஜிவி டௌன்டவுன் ஈஸ்ட் அரங்குகளைத் திறந்து குடும்பங்களுக்கும், சமூகத்துக்கும் புதிய அனுபவத்தை வழங்குவதால் நாங்கள் உற்சாகமடைகிறோம். குடியிருப்புகளுக்கு அருகாமையில் உலகத் தரம் வாய்ந்த வசதிகளுடன் அனைவரும் ஒருங்கிணைந்து இளைப்பாறி மகிழும் வாய்ப்பை இது தருகிறது” என்று கோல்டன் வில்லேஜ் மல்டிபிளெக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கிளாரா சியோ செய்தி அறிக்கையில் தெரிவித்தார்.
மேல் விவரங்களுக்கு ஜிவியின் இணையமுகவரி www.gv.com.sg அல்லது அதன் சமூக ஊடக முகவரி @gvmovieclub ஆகியவற்றை நாடலாம்.

